பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படம் நாளை (ஜூலை.28) வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான ஜமாவுளிக்கடைகளில் ஒன்றாகத் திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். லெஜண்ட் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆன அவர் சமூக வலைதளங்களில் பல விதமான ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். ஆனால் அந்த ட்ரோல்கள் பற்றியெல்லாம் கவலைப்படதா அவர், அடுத்ததாக படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவித்தார்.
அதன்படி, 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் லெஜண்ட் சரவணனுடன் கதாநாயகியாக நடிக்க தமிழில் யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்பட்டது.
இதனையடுத்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்களுடன் நடிகர்கள் விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தொடர்ந்து தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் இசைமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
முதற்கட்டமாக சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டன. இதையடுத்து, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது ”இந்தப் படத்திற்குள் தான் எப்படி வந்தேன்” எனப் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், முதலில் இந்தப் படத்தை நிராகரித்ததாகவும், பின்னர் மறு உருவாக்கம் செய்த திரைக்கதையை கேட்ட பின்னர் ஒத்துக் கொண்டதாகவும் பேசினார். தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், ’மொசலோ மொசலு’ பாடல் 14 மில்லியன் மற்றும் ’வாடிவாசல்’ பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மாபெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 28) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி.என்.அன்புச்செழியன் இப்படத்தை வெளியிடுகிறார். பிற நாடுகளில் படத்தை வெளியிடவும் பணிகள் வேகமாக நடந்தன.
அதன்படி தி லெஜண்ட் திரைப்படம் நாளை ஜூலை.28 ஆம் தேதி உலக அளவில் 2500க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.