தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநார்கள் திடீரென இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
1985 ஆம் ஆண்டு இதயகோயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். வயது தற்போது 67-ஐ கடந்து விட்ட நிலையில், தமிழ் சினிமாவின் ஐகானிக் இயக்குநராக உள்ளார். எந்த இயக்குநர் ஆனாலும் மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற மாதிரியான காதல் காட்சிகள் தங்கள் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைக்கும் அளவுக்கு மேக்கிங்கில் பின்னி விடுவார்.
ரஜினி, கமல், மோகன்லால், மாதவன், சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என முன்னணி நடிகர் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் மணிரத்னம் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் கனவு காவியமாக கருதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கி சாதனை படைத்தார். ஏதோ தாங்களே ஜெயித்து விட்டதாக தமிழ் சினிமா இப்படத்தை கொண்டாடி தீர்த்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக மணிரத்னம் அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு திடீரென தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பலரும் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சசி, லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
மேலும் அந்த பதிவில், “இந்த ஸ்பெஷலான மாலை நேர தருணத்துக்கு நன்றி மணி சார்! சிறந்த மற்றும் கொண்டாடப்படும் இந்த இயக்குநர்களுடன் பழகுவது, அவர்களுடன் நினைவுகளைப் பகிர்வது, மற்றும் கார்த்திக் பாடிய சில எவர்கிரீன் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுக்கு வைப் செய்தது போன்ற தருணங்கள் தான் நான் சம்பாதித்த உண்மையான செல்வமாக உணர்கிறேன். உபசரிப்புக்கு மிக்க நன்றி சுஹாசினி” என தெரிவித்திருந்தார்.
இந்த இயக்குநர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கில் தான் ஒன்றிணைந்தார்கள். படப்பிடிப்பு எல்லாம் தடைப்பட்டிருந்த நிலையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் இணைந்துள்ளார்கள். அதில் உருவான நட்பு மணிரத்னம் வீட்டு சந்திப்பு வரை சுமூகமாக அழைத்து சென்றுள்ளது. மேலும் இந்த மீட்டிங்கில் வெற்றிமாறன், மிஷ்கின், சுதா கொங்கரா போன்றவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.