வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்து யுவன் சங்கர் இசையமைத்து உருவாகியுள்ள படம் லத்தி. படத்தின் டீசர் வெளியீட்டு விழா சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்  முன்னிலையில் நடந்தது. 


உதயநிதியும் விஷாலும் பள்ளிநாட்கள் தொடங்கியே நண்பர்கள் என்பதால் அவர்களது நட்பு தொடர்பாக சில கேள்விகள் மேடையில் கேட்கப்பட்டது.


அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த உதயநிதி, ”நான் படங்களைத் தேர்வு செய்தால் அதில் சண்டைக்காட்சிகள் பாடல்காட்சிகள் எதுவுமே வராமல்தான் தேர்வு செய்வேன். விஷால் எனக்கு நேரெதிர். அவன் நடிக்கும் படத்தில் ஃபைட் சீன் எல்லாம் அப்படி இருக்கும். எங்களுக்குப் பொதுவாக ஒரு நண்பர் இருக்கிறார். அவரிடம் கூட இதுபற்றி அடிக்கடி சொல்லியிருக்கிறேன். விஷால் உழைப்புக்காகவே இந்தப் படம் நன்றாக ஓடும். விஷாலும் நானும் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். அது இன்னும் கூடவே இல்லை. அதனால்தான் நாங்கள் இன்னும் நண்பர்களாக இருக்கோம் போல. மற்றபடி அந்த நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டியபிறகு அதில்தான் திருமணம் என சொல்லிட்டு இருக்கான். அதற்காகவாச்சும் சீக்கிரம் அந்தக் கட்டடத்தைக் கட்டுங்கய்யா” என நகைச்சுவையாகச் சில கருத்துகளைப் பகிர்ந்தார்.


அவர் பேசி முடிக்கவும் அதுவரை அமைதியாக உதயநிதி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த விஷால் மேடையேறினார்.






விஷாலிடமும் உதயநிதியிடமும் பள்ளியில் யார் எளிதாகப் பொய் சொல்லுவார்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி வாலண்டியராகவே வந்து ஆஜரானார். எளிதில் மாட்டிக் கொள்வது யார் எனக் கேட்டதும், இருவருமே அப்படி எளிதில் மாட்டிக் கொள்பவர்கள் என பதிலளித்தார்கள். படத்தில் விஷாலுடன் சுனைனா இணைந்து நடிக்கிறார். நடிகர் நந்தாவின் ரானா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.