ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பாலச்சந்தர், ரஜினியிடம் உனக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்வியை எழுப்பினார். தன் எதிரில் இருக்கும், தன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்த பாலசந்தர் பெயரை ரஜினி சொல்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஆம் ரஜினி சொன்னது இயக்குநர் மகேந்திரன் பெயரை தான்..! 


இது ரஜினி ரசிகர்களுக்கோ, மற்றவர்களுக்கோ அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது தான் உண்மை. காரணம் ஸ்டைல் மன்னனாக அறியப்பட்ட ரஜினிக்குள், அப்படி ஒரு நடிப்பு அரக்கன் இருக்கிறான் என நிரூபித்த படங்கள் குறைவு தான். அதில் இயக்குநர் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும், ஜானி ஆகிய இரண்டு படங்களும் ரஜினியின் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தது என்றே சொல்லலாம். 


ஏனென்றால் அன்றைய காலக்கட்டத்தில் ரஜினி ஸ்டைல் செய்வதால் தான் திரையுலகில் முன்னணி நடிகராக மாறினார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ரஜினிக்கு நடிப்பு திறமை உள்ளது என நிரூபித்தார் மகேந்திரன். 


முள்ளும் மலரும்


1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தின் மூலம் தான் திரையுலகில் இயக்குநராக மகேந்திரன் அறிமுகமாகிறார். அந்த காலக்கட்டத்தில் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற ஆளுமைகளுக்குள் மத்தியில் தன்னையும் தனி அடையாளமாக அவர் மாற்றினார் . உமா சந்திரன் எழுதிய  முள்ளும் மலரும் நாவலை அடிப்படையாக கொண்டு முள்ளும் மலரும் படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. இதில் காளி என்ற கேரக்டரில் சுயகௌரவம் கொண்ட ரஜினி நடித்திருப்பார். இந்த படத்தின் பாடல்கள் மிக பிரபலம். 


படத்தின் பிற்பாதியில் ஒரு கை இல்லாதவராக ரஜினி நடித்திருப்பார். இந்த படம் அவரின் சினிமா கேரியரில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படம் பார்த்துவிட்டு ரஜினியை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குநர் பாலசந்தர், “உன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்ததில் பெருமைப்படுகிறேன்” என வியந்து பாராட்டினார். மேலும் ரஜினியே பல இடங்களில் தனக்குள் இருந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தவர் மகேந்திரன் தான் புகழ்வார். உண்மையில் தமிழ் சினிமாவில் இயக்குநராக நினைப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என சொல்லப்படுவது முள்ளும் மலரும் படத்தை பார்த்து புரிந்து கொள் என்பது தான். 


ஜானி 


கிட்டதட்ட 1981 ஆம் ஆண்டு மீண்டும் மகேந்திரன் - ரஜினி கூட்டணி ஜானி படத்தில் இணைந்தனர். ஒரு கமர்ஷியல் படத்திற்கான அத்தனையையும் கொண்டு அழகாக படத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார் மகேந்திரன். கிட்டதட்ட தமிழ் சினிமாவில் ஏற்கனவே வலம் வந்த, இன்னும் வலம் வரக்கூடிய கதை தான். ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை ரஜினியில் ஒருவர் திருடன், மற்றொருவன் சிகை திருத்துபவர். உருவ ஒற்றுமையை சாதகமாக கொண்டு திருடன் ரஜினி செய்யும் குற்றங்கள் என பழகிப்போன கதை தான் இதிலும் இருந்தது. 


ஸ்ரீதேவியுடனான காதலால் திருந்தும் திருடன் ரஜினி, தீபாவின் ஏமாற்று காதலால் கொலை காரனாகும் இன்னொரு ரஜினி என இரண்டு வேடங்களிலும் அசால்ட்டாக நடிப்பின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். 


இயக்குநர் மகேந்திரன் மரணித்த போது பேசிய ரஜினி, “அவர் என்னுடைய மிக மிக நெருங்கிய நண்பர். எங்கள் நட்பு சினிமாவை தாண்டி இருந்த ஆழமான நட்பு. எனக்குள் இன்னொரு ரஜினி இருக்கிறான் என காட்டியது மகேந்திரன் தான். ஒரு புது நடிப்பு பரிமாணத்தை சொல்லிக் கொடுத்தவர்” என்ற அந்த நிமிடத்திலும் பழைய விஷயங்களை மறக்காமல் பேசினார். இதுவே இயக்குநர் மகேந்திரனின் வெற்றி...!