தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமா இருக்கும் காலம் வரையிலும் நினைவுக்கூரப்படும் பிரபலங்களில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரின் பிறந்த தினம் இன்று என்பதால் பலரும் சமூக வலைத்தளங்களில் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.


ரசிகர்கள் மனதில் ஸ்ரீதேவி


சினிமாவைப் பொறுத்தவரை ஒரு ஆண்டில் எத்தனையோ பிரபலங்கள் அறிமுகம் ஆவார்கள், பலர் திரைத்துறையை விட்டே விலகுவார்கள். இதனால் யாருக்கும் இங்கு நிரந்தர இடம் என்பதே இல்லை. இதில் ஹீரோக்களாவது பல ஆண்டுகளுக்கும் நடிப்பார்கள். ஆனால் ஹீரோயின்களின் நிலைமை என்பது கேள்விக்குறி தான். அதேசமயம் மக்கள் தங்கள் மனதில் இடம் கொடுத்து விட்டால், ஒரு படம் நடித்தவராக இருந்தாலும் சரி, ஆயிரம் படங்கள் கொடுத்தவராக இருந்தாலும் சரி காலத்துக்கும் நினைவுக்கூரப்படுவார்கள். அப்படி காலத்துக்கும் நினைவுக்கூரப்படுபவர்களில் ஒருவர் தான் ஸ்ரீதேவி. 


எவர் க்ரீன் கனவுக்கன்னி


குழந்தை நட்சத்திரமா, நடிகையாக, துணை நடிகையாக என பல கேரக்டரில் கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் மகாராணியாக வலம் வந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் எப்போதும் தமிழ்மக்கள் ஒருபடி மேலே வைத்து தான் ஸ்ரீதேவியை கொண்டாடினர். விருதுநகர்  மாவடத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த அவர், பின்னாளில் இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியாக மாறிப்போனார். 


1969 ஆம் ஆண்டு துணைவன் படத்தில் சாண்டோ சின்னப்பா தேவர்  ஸ்ரீதேவியை  குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கினார். ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது அவரின் கண்கள் தான். நடிகையாக கே.பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மூன்று முடிச்சு படம் கமல், ரஜினி, ஸ்ரீதேவிக்கு மிக முக்கிய படமாக அமைந்தது. ஆரம்பம் முதலே மிகவும் வெயிட்டான கேரக்டரிலேயே நடித்திருந்ததால் ரசிகர்கள் ஸ்ரீதேவியை கொண்டாட தொடங்கினர். 


மயிலாக கொண்டாடப்படுபவர்


இப்படியான நிலையில், மயிலு கேரக்டரை ஸ்ரீதேவிக்காக இயக்குநர் இமயம் பாரதிராஜா ‘16 வயதினிலே’ படம் மூலம் உருவாக்கியிருந்தார். கிராமத்துப் பெண்ணாகவே மாறிய ஸ்ரீதேவியை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடியது. ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என யாருக்கு ஜோடியாக நடிப்பது முக்கியமில்லை, நம் கேரக்டர் பேசப்படுமா என்பதில் தான் அவர் கவனமாக இருந்தார். அதில் தான் ஸ்ரீதேவியின் வெற்றி ரகசியமே உள்ளது. 


கமல் -ஸ்ரீதேவி ஜோடி


சிவாஜி - பத்மினி, எம்ஜிஆர் - சரோஜாதேவி ஜோடி திரையுலகில் கமல் -ஸ்ரீதேவி ஜோடி பேசப்பட்டது. ப்ரியா, ஜானி, மீண்டும் கோகிலா, குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மனிதரில் இத்தனை நிறங்களா?, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், ராணுவ வீரன், மீண்டும் கோகிலா, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா,தனிக்காட்டு ராஜா என ஸ்ரீதேவி நடித்ததெல்லாம் ஹிட். தமிழிலிருந்து தெலுங்குப் பக்கம் போன அவர், மலையாள படங்களிலும் நடிக்க தொடங்கினார். அங்கும் தனது வெற்றிக்கொடியை ஏற்ற, பின்னர் கன்னடம், தொடர்ந்து 80 களின் பிற்பகுதியில் பாலிவுட் திரையிலகின் எண்ட்ரீ கொடுத்தார். 


ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப்பச்சன் என முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். ஸ்ரீதேவியை தமிழுக்கு இனி இல்லை என போர்டு வைக்கும் அளவுக்கு பாலிவுட் ரசிகர்கள் பெண் சூப்பர் ஸ்டார் ஆக அவரை கொண்டாடினர். சொல்லப்போனால் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி தான் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. 


பெண்களே பொறாமைப்படும் பேரழகு


அந்த காலக்கட்டத்தில் பெண்களில்  ஸ்ரீதேவிதான்  பேரழகு என பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு ஜொலித்தார். அஜித்,விஜய் ஆகியோருடனும் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டாலும், இன்னும் அவரது இறப்பு ரசிகர்களால் நம்ப முடியாத அளவுக்கு ஒன்றாகவே உள்ளது. இந்திய சினிமாவை விவரிக்க சொன்னால் அதில் ஸ்ரீதேவி செய்த ஆட்சி என்பது மறுக்க, மறைக்க முடியாத ஒன்று. அவர் மறைந்தாலும் மேலே சொன்னது போல சினிமா உயிருடன் இருக்கும் வரை ஸ்ரீதேவி கொண்டாடப்படுவார் என்பதே உண்மை.