"நிலவே என்னிடம் மயங்காதே..." என பாடி நிலவோடு சேர்ந்து கேட்போரையும் மயக்கிய மாய குரலோன் பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் 93வது பிறந்தநாள் இன்று. 

Continues below advertisement


திரையுலகம் எத்தனையோ பாடகர்களை கண்டதுண்டு. ஆனால் பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக காலத்தால் அழியாத பின்னணி பாடகராக இருந்து வருபவர் பி.பி. ஸ்ரீனிவாஸ். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் என்பதுதான் அவரின் பி.பி என்பதன் சுருக்கம் என்றாலும் பிளேபேக் சிங்கர் என்பதும் பொருத்தமாகவே அமைந்தது. இன்றளவும் ரசிகர்களை தனது பாடல்கள் மெய்மறக்க செய்யும் வித்தகர். 


 



இந்துஸ்தானி இசை மீது காதல் :


அப்பாவின் விருப்பத்தையும் மீறி அம்மாவின் கால் வழியில் இசை மீது இருந்த தீராத காதலால் இசை துறையை தேர்ந்து எடுத்தவர். பி.பி. ஸ்ரீநிவாஸை 'மிஸ்டர் சம்பத்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தியவர்  எஸ்.எஸ்.வாசன். இவர் வட இந்தியப் பாடகர்களுக்கு நிகராக இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கியவர். 


எட்டு மொழிகளில் புலன் பெற்றவர் : 


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகள் மட்டுமின்றி எட்டு மொழிகளில் பேசி பாட மட்டுமின்றி இன்ஸ்டன்ட்டாக கவிதையை புனையும் திறமை பெற்றவர் பி.பி. ஸ்ரீனிவாஸ். காலங்களில் அவள் வசந்தம், போன் ஒன்று கண்டேன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், மயக்கமா கலக்கமா, தாமரை கன்னங்கள், இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, மனிதன் என்பவன், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் , வளர்ந்த கலை, ரோஜா மலரே ராஜகுமாரி போன்ற பாடல்கள் அவரின் பெருமை பேசும் இனிமையான ராகங்கள். அவரின் குரலில் மெலடி பாடல்களில் இருக்கும் காதல் உணர்வு, ஆற்றாமை, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் கொட்டிவிடுவார். அதிலும் ஒரு தனி ஸ்டைல் கொண்டுவருவதுதான் பி.பி.எஸ் தனித்துவம். 


 



கனிவானவர் எளிமையானவர் :


குரலில் மாயாஜாலம் செய்ய கூடிய இந்த வித்தகர் மற்றவர்களையும் அவர்களின் திறமைகளையும் கூட மதிக்க தெரிந்த பாராட்ட தயங்காத பரந்த மனம் படைத்தவர். அனைவரிடத்திலும் எந்த ஒரு ஈகோ, பந்தா இன்றி எளிமையாக பேசி பழக கூடியவர். ஹிந்தி திரையுலகில் முகமது ரஃபியின் சாயலில் கம்பீரமும் மென்மையும் கலந்த பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல் அவரை அடிக்கடி நினைவு படுத்தும். 



ஜெமினி கணேசன் - பி.பி. ஸ்ரீனிவாஸ் மேஜிக் :


காதல் மன்னன் ஜெமினி கணேசனின் குரலுக்கு பொருத்தமானவர் என்றால் அது ஏ.எம். ராஜா தான் என்ற காலகட்டத்தில் 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' என்ற முதல் பாடலை ஜெமினி கணேசனுக்காக ரெக்கார்ட் செய்த போது அட இன்னும் கச்சிதமாக இருக்கே என அனைவரையும் பாராட்ட வைத்ததோடு அதனை தொடர்ந்து ஜெமினி கணேசனின் ஆஸ்தான பாடகராக மாறினார் பி.பி. ஸ்ரீனிவாஸ். 


எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், நாகேஸ்வரராவ், என்.டி.ஆர், ராஜ்குமார்,  காந்தாராவ் என மிக பெரிய ஜாம்பவான்களுக்கு குரல் கொடுத்த மகா கலைஞன். கேட்போரின் காதுகளையும் தாண்டி உள்ளத்தை தொடும் அளவுக்கு பாட வேண்டும் என்பதே இந்த கலைமாமணி விருது பெற்ற இந்த பாடகரின் ஒரே நோக்கமாக இருந்ததது. அந்த தத்துவம் தான் அவரின் பாடல்களை இன்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களை கொண்டாட வைத்து வருகிறது.