‘அய்யப்பனும் கோஷியும்’- பட இயக்குநர் சச்சியின் மனைவியான சிஜி சச்சி தனது பேஸ்புக் பக்கத்தில்  நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  


68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது உட்பட தமிழ் திரையுலகம் 10 விருதுகளை அதே போல மலையாளத்தில் 'அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காக சிறந்த பின்னணி பாடகர் (பெண்) விருது பழங்குடியினரான நஞ்சியம்மாவுக்கும், சிறந்த இயக்குநரான விருது அந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் சச்சிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 30 ஆம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. சச்சி சார்பில் அவரது மனைவியான சஜி இந்த விருதை வாங்கிக்கொண்டார்.




அப்போது அவர் அழுத நிலையில் அரங்கத்தில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. 'களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்'' பாடலுக்காக நஞ்சியம்மாவுக்கு விருது வழங்கப்பட்ட போது, மொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. இந்த நிலையில் இந்த விருது குறித்தும் சச்சி குறித்தும் அவரது மனைவி தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


இது குறித்து சிஜி சச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது, “ ஒரு முறை நீங்கள், நாம் ஒரு நாள் இந்திய குடியரசுதலைவருடன் உணவு அருந்தி தேசிய விருதை பெறுவோம் என்று சொன்னீர்கள். அப்போது அதை எனது நெற்றியில் முத்தமிட்டு நீங்கள் பெற்றுக்கொள்வேன் என்று கூறினீர்கள். 


இன்று உங்களது முத்தத்தை பெறாமல் தேசிய விருதை எடுத்து சென்றிருக்கிறேன். உலகமே கைதட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்பிய பாடலும், பாடகி நஞ்சியம்மாவும் இன்று உலகின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆம் உண்மையில் நீங்கள் வரலாற்றில் தேடப்படவில்லைதான். ஆனால் உங்களை தேடி வந்தவர்களுக்காக நீங்கள் வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். அந்த தருணம் இன்று மாலை அரங்கேறியது. 


 






பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத பாடகர் ஒருவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் அந்த வரலாற்றுத் தருணத்தை இன்று நாம் பார்த்தோம். அதோடு, 'அய்யப்பனும் கோஷியும்' போன்ற ரத்தினத்தை உருவாக்கி, நஞ்சியம்மா போன்ற திறமையைக் கண்டறிந்ததற்காக, உங்கள் சார்பில் விருது பெறுகிறேன். 


டியர் சச்சி என்னுடைய மனது மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தாலும், நீங்கள் இல்லை என்று நினைக்கும் போது என்னுடைய மனது சோகத்தில் மூழ்குகிறது. எனக்குத்தெரியும் நிச்சயம் நீங்கள் இதை சொர்க்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று. நமது கனவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கிறது. நான் எனது பயணத்தை உன்னுடைய கனவை நோக்கி செலுத்துகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.


இந்த விருதுகள் மட்டுமல்லாமல், இந்தப்படத்தில் ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு சிறந்த சண்டை இயக்கத்தை வடிவமைத்ததற்காகவும், சிறந்த துணை நடிகருக்கான விருது அந்தப்படத்தில் நடித்த பிஜூ மேனனுக்கு வழங்கப்பட்டது.