கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளன.


அயன்




மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான படம் அயன். சூர்யா, தமன்னா , பிரபு, கருணாஸ், ஜகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு  இசையமைத்தார். அயன் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துள்ளன


அயன் படத்தை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் Surprise என்று சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு வகையில் பார்வையாளரை ஆச்சரியப்படுத்தும் ஒன்றை படம் முழுவதும் வைத்திருப்பார் இயக்குநர் கே.வி.ஆனந்த் 


படத்தின் முதல் காட்சியில் விமானத்தில் இருந்து இறங்கும் சூர்யா எல்லாரிடமும் சகஜமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு புதுப்படத்தை மக்கள் ஏன் திரையரங்கில் பார்க்காமல் திருட்டுத்தனமாக பார்க்கிறார்கள் என்று பேசுவார். தேவாவாக நடித்திருக்கும் சூர்யா இந்த வசனங்களை பேசும்போது.. சரி ரொம்ப கன்னியமான ஒரு நாயகன் என்று நம்பியும் விடுவோம்.


ஆனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அடுத்த நொடி சென்னை தமிழ் பேசி ஒரு ஆச்சரியத்தை தூண்டுவார். அங்கு தொடங்கி படம் முழுவதும் இப்படி ஏதோ ஒரு வகையில் நம்மை ஆச்சரியப்படுத்தியபடியே செல்லும் திரைக்கதை. தண்ணீர் பாட்டிலில் பபுள் கம் ஒட்டி வைரம் கடத்துவது. தலையில் வைரத்தை கிரீடமாக அணிவது, ரொட்டி துண்டுகளில் தங்கத்தை பதுக்கி வைப்பது, கிழிந்த ரூபாய் நோட்டு, வயிற்றுக்குள் போதைப்பொருட்களை கடத்துவது , கொகெய்னில் செய்த பிள்ளையார் சிலை, இப்படி படத்தில் சலிப்பே இல்லாமல் புதுப் புது காட்சிகள் நம் கவனத்தை திசைத்திருப்பாமல் வைத்திருக்கும்.


போதைப்பொருள் கடத்தல் பற்றிய படம் என்றதும் எடுத்தவுடன் நேரடியாக கதைக்குள் சென்றுவிடாமல் திருட்டு டிவிடி யில் தொடங்கி , வைரம் , போதைப்பொருள் என படிப்படிப்படியாக நம்மை அந்த உலகத்திற்குள் கூட்டிச் செல்கிறது படம். ஆக்‌ஷம் படம்தானே என்று மேலோட்டமாக இல்லாமல் கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.




தேவா - தாஸ்  , தேவா - சிட்டி  , தேவா - கமலேஷ், தேவா - யமுனா. தாஸ் - கமலேஷ் இப்படி பல்வேறு காம்பினேஷன்களை உருவாக்கி குரு சிஷ்யன், தந்தை மகன், நட்பு , பகை, காதல்  என எல்லா உணர்ச்சிகளையும் படத்தில் கொண்டு வந்திருப்பார்கள்.


மீம்களாக உயிர்வாழும் வசனங்கள்




"யார நம்புறதுனே தெரில தாஸ் அண்ணா, லட்டுல வச்சேன்னு நினைச்சியா தாஸ்.. நட்டுல வச்சேன்" , "பய புடிச்சுட்டான்.. எல்லாம் டெக்னாலஜி" என்று பேசும் வசனம் என படத்தின் ஒவ்வொரு வசனமும் காட்சியும் மீம்களாக மாறி இருக்கின்றன.


படத்தின் நாயகனாக தேவா மிகப்பெரிய பலசாலி என்று காட்டுவதற்கு ஒரு சண்டைக்காட்சி வைக்காமல் அவனது அறிவு, அவன் திறமை , அவன் குடும்ப பின்புலம் என எல்லாம் சுவாரஸ்யமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.




பொதுவாக வடசென்னையை சேர்ந்தவன் என்றாலே கொலை , படிக்காதவன், முரடன் என்கிற வழக்கமான பொதுமைப்படுத்தல்களுக்கு மாறாக நன்றாக படித்த, உலக சினிமா அறிவு கொண்ட , சுய கட்டுப்பாடு உடைய ஒருவனாக தேவாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும்


இன்று வரும் ஆக்‌ஷன் படங்களில் ஹீரோயின் வெறும் செட் பீஸாக மட்டுமே நடத்தப்படுகிறார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நாயகியை எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அயன். 


தாஸாக வரும் பிரபு, கருணாஸ், ஜகன் , கமலேஷ் , பொன்வண்ணன் , தேவாவின் அம்மா என ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.


ஸ்டண்ட் காட்சிகள்


அதே நேரத்தில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு தனி பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்டண்ட் காட்சிகளை சூர்யா நிஜமாக செய்தார். மிகையான கற்பனை இல்லாமல் எதார்த்தமாகவும் அதே நேரத்தில் ஹாலிவுட் படங்களில் இருக்கும் நேர்த்தியுடனும் சண்டைக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


பின்னணி இசை


ஹாரிஸ் ஜெயராஜ் மிகவும் வெரைட்டியான ஒரு ஆல்பத்தை இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார். திடீரென்று ஒரு சண்டைக்காட்சியில் டிரம்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும். கார் சேஸிங் காட்சியில் பிரம்மாண்டமான  ஆர்கெஸ்ட்ரா இசை பின்னணியாக ஒலிக்கும். மிக மாஸான சில காட்சிகளில் கிளர்ச்சியூட்டும் வகையிலான ஒரு இசை ஒலிக்கும். ஒருவகையில் பின்னணி இசை தன்னளவில் ஒரு கதாபாத்திரம் போன்ற உண்ர்வை ஏற்படுத்தும். 


நிச்சயமாக கே.வி.ஆனந்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது அயன்தான்.