தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்கவும் வைத்தவர், சிந்திக்கவும் வைத்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். கதைக்கு ஏற்ப தனது கதாபாத்திரங்களினால் சமூக சீர் திருத்தங்கள், மூட நம்பிக்கை என அனைத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.
சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை முன்மாதிரியாக கொண்டு அவர்களது வழியிலும் நடந்து காட்டினார். மேலும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணிய அவர், பல லட்ச மரங்களை நட்டு அதனை கொண்டு சேர்த்தார்.
இப்படி திரையுலகிலும், பொது வாழ்க்கையிலும் கலக்கிய விவேக், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நல குறைவால் நம்மை விட்டு மறைந்தார். இந்தநிலையில், விவேக்கின் மகள் தேஜஸ்வினி இன்று பரத் என்கிற வரன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் எளிய முறையில் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் நடந்தது.
மேலும், நடிகரின் விவேக்கின் கனவுபடி மணமக்கள் இருவரும் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் மூலிகை பூ செடிகள் நட்டு, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வழங்கினர். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.