Lok Sabha Election: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட, ஆயிரத்து 749 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.


1, 749 வேட்புமனுக்கள்:


வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் முடிவடைந்தது. அதற்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் ஆயிரத்து 749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 


அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 பேரும், தென்சென்னையில் 28 பேரும் மத்திய சென்னையில் 22 பேரும்,  நாகப்பட்டினம் தொகுதியில் 26 பேரும், சிதம்பரம் தொகுதியில் 27 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


வேட்புமனு பரிசீலனை:


பெறப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பார்வையாளர்கள் முன்பு இன்று பரிசீலனை செய்வார்கள். அதில் முறையாக கையொப்பமிடாத, சரியாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். ஏற்கப்பட்ட வேட்புமனுக்களை திரும்பப் பெற விண்ணப்பதாரர்களுக்கு வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். அதைதொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.


சின்னம் ஒதுக்கீடு..!


அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடைப்பதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் குலுக்கல் முறையில் ஒதுக்கக் கூடும்.


களைகட்டிய வேட்புமனு தாக்கல்:


நாடு முழுவதுமுள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நான்கு நாட்கள் சுயேச்சைகளே அதிகப்படியாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில் வருவது, கராத்தே செய்து கொண்டு வருவது, நடனமாடியபடி வருவது என பல்வேறு நூதன செயல்பாடுகளுடன் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் அலுவலர்களின் அலுவலகங்கள் களைகட்டின.


நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்லில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக என மூன்று பெரும் கூட்டணிகள் தேர்தலை சந்திக்க, நாம் தமிழர் கட்சி மீண்டும் தனித்து களம் காண்கிறது. இதனால் மாநிலத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து கடந்த திங்கட்கிழமை முதல் அதிதீவிரமாக வேட்புமனுதாக்கல் செய்தனர். பங்குனி உத்திரமான அன்றைய தினத்தில் அதிமுக சார்பில் களம் காணும் 33 வேட்பாளர்களும் வேட்புமனுதாக்கல் செய்தனர். அன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 400-க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.