மறைந்த நடிகை சௌந்தர்யாவின் 51வது பிறந்ததினமாகும். அவர் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் திரையுலகில் மகத்தான சாதனை படைத்திருப்பார்.
சௌந்தர்யாவாக மாறிய சௌமியா
சௌந்தர்யாவின் இயற்பெயர் சௌமியா ஆகும். இவர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை கே.எஸ்.சத்தியநாராயணா கன்னட திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பெங்களூருவில் எம்பிபிஎஸ் படிக்கச் சென்ற சௌந்தர்யா முதல் ஆண்டோடு படிப்பை நிறுத்தினார். திரையுலகில் அறிமுகமானார். கன்னடத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான பா நன்னா ப்ரீத்திசு என்ற படம் தான் அவரின் அறிமுகப்படமாக அமைந்தது.
தொடர்ந்து தெலுங்கில் மணவரலி பெல்லி என்ற படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்து தமிழ் திரையுலகிற்குள்ளும் காலடி எடுத்து வைத்தார். அவரின் முதல் படமாக ‘பொன்னுமணி’ அமைந்தது. இந்த படத்தின் பெயர் தெரியாதவர்கள் கூட ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா’ பாடலை சொன்னால் தெரிந்து கொள்வர்கள். அந்த படம் சூப்பரான வெற்றியைப் பெற்றது. சௌந்தர்யா கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.
சூப்பர் ஸ்டார் ஜோடி
தொடர்ந்து முத்துக்காளை, அன்பு மகன் மருது, சிப்பாயி,சேனாதிபதி படங்களில் நடித்த அவருக்கு 1997 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்தோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருணாச்சலம் படத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு ரஜினியுடன் நடித்திருப்பார். குறிப்பாக நகுமோ, மாத்தாடு மாத்தாடு பாடல்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.
இதனையடுத்து கமல் ஜோடியாக ‘காதலா காதலா’ படத்தில் நடித்தார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு எழுதப்பட்ட கதையில் தன்னால் காமெடியும் செய்ய முடியும் என சௌந்தர்யா காட்டினார். இதற்கிடையில் மன்னவரு சின்னவரு படத்தில் நடித்து முடித்த அவருக்கு மீண்டும் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் தமிழில் விஜயகாந்துடன் ‘தவசி, சொக்கத்தங்கம்’, பார்த்திபனுடன் ‘இவன்’, உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சூப்பர்ஹிட்டான சூரியவம்சம் படத்தின் இந்தி ரீமேக்கில் சௌந்தர்யா தான் கதாநாயகியாக இருந்தார். என்னதான் கன்னட நடிகையாக இருந்தாலும் தெலுங்கில் அதிக படம் கொடுத்து அந்த திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார்.
விதியாக வந்த விமான பயணம்
இதற்கிடையில் 2003 ஆம் ஆண்டு மென்பொருள் பொறியாளரான ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் பாஜக கட்சியில் சேர்ந்த சௌந்தர்யா 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது ஏற்பட்ட விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவேளை இன்று சௌந்தர்யா இருந்திருந்தால் கண்டிப்பாக முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இருந்திருப்பார் என நினைப்பவர்கள் ஏராளம். அவரின் மரணம் இன்றளவும் பலராலும் நம்பவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.