தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த சௌந்தர்யா மறைந்து இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.


சௌமியா என்ற சௌந்தர்யா


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த நடிகை சௌந்தர்யாவின் இயற்பெயர் சௌமியா. எனது தந்தை கன்னட திரையுலகில் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் பிரபலமாக திகழ்ந்தார். இதன் மூலம் சௌந்தர்யாவுக்கு திரையுலக வாய்ப்பு மிக எளிதாக அமைந்தது என சொல்லலாம். 


தென்னிந்திய சினிமாவின் ராணி


1992 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான காந்தர்வா என்ற படத்தின் மூலம் சவுந்தர்யா நடிகையாக அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் என்ட்ரீ கொடுத்தார். கார்த்தி நடித்த பொன்னுமணி படம் தான் சௌந்தர்யாவிற்கு முதல் படம் ஆகும். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக இன்றளவும் பலரின் ஃபேவரைட் ஆக "நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா புரியுமா" பாடல் சௌந்தர்யாவின் அடையாளமாக அமைந்தது. 






இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தியுடன் முத்துக்காளை, சத்யராஜுடன் சேனாதிபதி, கமலுடன் காதலா காதலா, ரஜினியுடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா, விஜயகாந்துடன் தவசி மற்றும் சொக்கத்தங்கம், பார்த்திபனுடன் இவன் என குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டிப் பறந்த சௌந்தர்யா 2003 ஆம் ஆண்டு ஜி எஸ் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


கட்சியும் மரணமும்


இப்படியான நிலையில் சௌந்தர்யா பாஜகவில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைக்காக பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக விமான விபத்தில் அவர் இறந்தார். சௌந்தர்யாவின் மரணம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மரணம் அடைந்தபோது கர்ப்பமாக இருந்தார் என்பது மேலும் நீங்கா துயரை உண்டாக்கியது. இன்றும் தொலைக்காட்சியில் அவர் நடித்த படங்களை பார்க்கும் போது 'இன்னும் சில நூறு ஆண்டுகள் சௌந்தர்யா இருந்திருக்கக் கூடாதா?' என்ற கேள்விகளையே அனைவரிடத்திலும் எழுப்பச் செய்யும். அப்படியான சௌந்தர்யா சினிமாவின் அனைத்து காலகட்டங்களிலும் நினைவு கூறப்படுவார்.




மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 3: "யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு" காதல் துணையை இழந்த ஆணின் வலி!