நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி காலத்தால் அழியாத காவியமான “வசந்தமாளிகை” படம் இன்றோடு 51 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


காலத்தால் அழியாத காவியம்


திரையுலகை பொறுத்தவரை சில படங்கள் காலத்தால் அழியாத காவியமாக பல தலைமுறைகளை தாண்டி கொண்டாடப்படும். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது மெருகேற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் “வசந்த மாளிகை”. கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்த படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ, பண்டரி பாய், நாகேஷ்,வி.கே.ராமசாமி, கே.பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 


படத்தின் கதை 


பகட்டான ஜமீன் குடும்ப இளைஞரான ஆனந்த் (சிவாஜி கணேசன்) பணத்தில் புரளும் ஒரு ஆடம்பர மனிதர். எப்போதும் குடிக்கு அடிமையான அவர் ஒரு விமான பயணத்தில் பணிப்பெண்ணாக வரும் லதாவை (வாணி ஸ்ரீ) சந்திக்கிறார். இதனிடையே அம்மாவுக்கு விமான பணிப்பெண் வேலை பிடிக்காததால் வேறு வேலை கேட்டு சென்ற இடத்தில் லதா பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார். அவரை காப்பாற்றும் ஆனந்த் தன்னுடைய உதவியாளராக பணியமர்த்துகிறார். 


ஒரு கட்டத்தில் வீட்டின் பணியாள் (வி.எஸ்.ராகவன்), மற்றும் ஆனந்தின் அம்மா (சாந்தகுமாரி) இருவரும் அவர் ஏன் குடிகாரனாக மாறினார் என்பது பற்றிய உண்மையெல்லாம் சொல்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் குடியை நிறுத்தி நல்லவனாக மாறுகிறார் ஆனந்த். கூடவே லதா மேல் காதலும் வர அவருக்காக வசந்த மாளிகை கட்டுகிறார். ஆனால் வாணி ஸ்ரீ காதலில் விலக, ஆனந்த் நிலையும், அவர் கட்டிய வசந்த மாளிகையும் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதையாகும். 


முழுக்க முழுக்க பிரமாண்டம் 


இந்த படம் முழுக்க முழுக்க பிரமாண்டமாக, அதே சமயம் வித்தியாசமான மேக்கிங்கில் அசத்திருந்தது. குறிப்பாக வசனங்கள் பட்டையை கிளப்பியது. லதாவை காப்பாற்றும் காட்சியில் கூட எதிராளியிடம், “சரின்னு சொன்னா எந்தப் பெண்ணையும் விடக்கூடாது. வேண்டாம்னு சொன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது” என சொல்லும் வசனமே அவருடைய கேரக்டரை சொல்லி விடும். 


வசந்த மாளிகையை லதாவிடம் சுற்றும் காட்டும் காட்சியிலும்,  காதலின் ஆழத்தை வார்த்தைகளால் விளக்கி  அசத்தியிருப்பார்கள். மற்றொரு காட்சியில்  சிவாஜி  விஷத்தைச் சாப்பிட்டு விடுவார். அவரை தேடி ஓடி வரும் வாணிஶ்ரீ ‘நான் வந்துட்டேன்’ என சொல்ல, பதிலுக்கு சிவாஜி ’நீ வந்துட்ட..நான் போய்க்கிட்டே இருக்கேன்’ என்பது பன்ச் அடிப்பார். அதேபோல் லதா நீ என்னை விஸ்கியை தானே குடிக்கக்கூடாதுன்னு சொன்னே. . விஷத்தைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லலையே என சொல்லும் இடங்கள் எல்லாம் அட போட வைக்கும்..!


எவர்க்ரீன் பாடல்கள் 


மேலே சொன்ன எல்லாவற்றையும் விட வசந்த மாளிகை என பட பெயரை சொன்னால் அதிலுள்ள முத்தான பாடல்கள் தான் நியாபகம் வரும். ’குடி மகனே…பெருங்குடி மகனே’, ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன், கலைமகள் கை பொருளே, மயக்கம் என்ன, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக ஆகிய பாடல்கள் என்றென்றும் கொண்டாடப்படும் வகையில் அமைந்தது. 1971 ஆம் ஆண்டு தெலுங்கிக் வெளிவந்த  ’பிரேம நகர் படத்தின் தமிழ்ப்பதிப்பே இப்படம் என்றாலும், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாளிகை தான் இந்த வசந்த மாளிகை..!




மேலும் படிக்க: Vasantha Maligai: பூமர் காதலா... பூஸ்ட் காதலா... 2கே கிட்ஸ் பார்வையில் ‘வசந்த மாளிகை’ படம் எப்படி? இதோ ஒரு அலசல்!