ரகுவரன்


தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகர்களில் ஒருவர் மறைந்த நடிகர் ரகுவரன். தனித்துவமான குரல் மற்றும் உடல்மொழியால் தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டிய ரகுவரன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


1980 முதல் 2000 வரை வெளியான பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினி நடித்த மனிதன், பாஷா அண்ணாமலை, அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களில் மிரட்டியிருக்கிறார்.  வில்லன் ரோல் தவிர்த்து இவர் நடித்த ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை.


ரகுவரன் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


மிஸ்டர் பாரத்


எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் , சத்யராஜ் இணைந்து நடித்த படம் மிஸ்டர் பாரத். இப்படத்தில் மைக்கல் என்கிற வில்லன் ரோலில் ரகுவரன் நடித்தார். கரடுமுரடாக தோற்றத்தில் ஒரு காலில் நொண்டி நடக்கும் அவரது உடல்மொழி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த கதாபாத்திரம் எப்படி தனித்துவமானதாக மாறியது என்பதை ரகுவரன் தனது பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர்.,






“மிஸ்டர் பாரத் படத்தில் ஷூட்டிற்காக நான் ரெடியாகி வந்துவிட்டேன். படப்பிடிப்பிற்கு முந்தின நாள் நான் பைக்கில் இருந்து கீழே விழுந்து என் காலில் அடி பட்டிருந்தது.  நான் வித்தியாசமாக நிற்பதை பார்த்த எஸ்.பி முத்துராமன் உன் காலில் அடி பட்டிருக்கிறதா என்று கேட்டார் . நான் இல்லை என்று அவரிடம் பொய் சொன்னேன். உண்மையைச் சொல் காலில் அடிபட்டிருக்கிறது என்று அவர் கண்டு பிடித்துவிட்டார். நான் ஆமாம் அடிபட்டிருக்கிறது ஆனால் நான் எப்படியாவது வலியை தாங்கிக் கொண்டு நொண்டாமல் நடித்துவிடுவேன் என்று அவரிடம் சொன்னேன். வேண்டாம் நீ அப்படியே நடி . அதுதான் உன்னுடைய ஸ்டைல் என்று எஸ்.பி. முத்துராமன் என்னை அப்படியே நடிக்கச் சொன்னார். அதனால் தான் அந்த கதாபாத்திரம் தனித்துவமாக தெரிந்தது” என்று ரகுவரன் தெரிவித்துள்ளார்