மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் ஒரு வீடியோவில் அவர் தனது நிறைவேறாத காதலை பற்றி பேசியுள்ளார். 


ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாரிமுத்து


ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் மாரிமுத்து. சிம்பு நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அவர், பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்கள் மூலம் இயக்குநராக உயர்ந்தார். தொடர்ந்து யுத்தம் செய் படத்தின் மூலம்  நடிகராக ரசிகர்களிடத்தில் பரீட்சையமான அவர், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 


இப்படியான சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்த மாரிமுத்து, திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் மாரிமுத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. 


நிறைவேறாமல் போன காதல் 


அதில் ஒரு வீடியோவில் பேசியுள்ள மாரிமுத்து, “நான் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். நான் சிவகாசியில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கவிதையின் மூலமாக பெண் ஒருவரின் நட்பு கிடைத்தது. கடிதத்திலேயே பரிமாறப்பட்ட அந்த நட்பு பின்னாளில் காதலாக மாறியது. ஒருநாள் அந்த பெண்ணை நேரில் பார்க்க குற்றாலத்துக்கு புறப்பட்டுச் சென்றேன். ஆனால் அப்பெண்ணுடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. என்னவென்று பக்கத்து வீட்டில் விசாரித்தேன். அவங்க ஒரு பெரிய சம்பவம் சொன்னாங்க. அந்த நிகழ்வால் அப்பெண் தன் குடும்பத்தோடு எங்கேயே போய்ட்டாங்க. இன்றைக்கு வரை (அந்த நேர்காணல் அளித்த நாள்) எங்கே இருக்காங்கன்னு தெரியல. அந்த சம்பவம் என்னை ரொம்ப பாதிச்சது. 


ஒரு பெண்ணை ஒருவன் பார்க்காமலே காதலிச்சான்.. காதல்கோட்டை படம் மாதிரி இருக்கும்...அந்த பெண்ணை பார்க்க போன இடத்தில் அவரை காணவில்லை இதையெல்லாம் வச்சி தான் கண்ணும் கண்ணும் படத்தின் கதை அமைந்தது” என தெரிவித்துள்ளார். 


கண்ணும் கண்ணும் படம் 


கடந்த 2008 ஆம் ஆண்டு பிரசன்னா, உதயதாரா, வடிவேலு, விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் ‘கண்ணும் கண்ணும்’. தினா இசையமைத்த இப்படம், பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக வடிவேலுவின் ‘கிணற்றை காணோம்’ ,  ‘அடிச்சி கூட கேப்பாங்க..அப்பவும் சொல்லிடாதீங்க’ ஆகிய காமெடிகள் ஆல்டைம் ஃபேவரைட் ஆக ரசிகர்களிடத்தில் உள்ளது. கிட்டதட்ட இப்படத்தின் முதல் பாதி, மாரிமுத்திவின் வாழ்க்கையில் நடந்த அந்த நிறைவேறாத சம்பவங்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Sanatan Issue: ”சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்” - மத்திய அமைச்சர் மிரட்டல்