நடிகர் மதன் பாப் காலமானார்

நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல் நலக் குறைவால் காலமான செய்து திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சிகிச்சை பலனின்று சென்னை அடையாறில் தனது இல்லத்தில் அவர் காலமானார். அவருக்கு வயது 71. மதன் பாபின் உடல் அடையாறில் அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. 

மதன் பாப் ஒரு குத்துச் சண்டை வீரரா

நகைச்சுவை நடிகராக 180 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மதன் பாப். அனால் மதன் பாப் தனது சினிமா கரியரை ஒரு இசையமைப்பாளராக தான் தொடங்கினார். இதுமட்டுமில்லாமல் சென்னையில் 70 களில் பிரபலமாக இருந்த சார்பட்டா பரம்பரை என்கிற குத்துச் சண்டை அணியின் உறுப்பினரும் கூட என்பது பலர் அறியாத தகவல். பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா படம் வெளியான பின் இந்த தகவல் ரஞ்சித்திற்கு தெரியவரவே முன்னாடியே தெரிந்திருந்தால் மதன் பாபை இந்த படத்தை நடிக்க வைத்திருக்கலாம் என வருத்தம் தெரிவித்துள்ளார். 

மனைவியுடன் ஓடிப்போய் திருமணம் 

மதன் பாப் இசையமைப்பாளராக இருந்தபோது அவர் பின்னணி பாடகி தனது மனைவி சுசிலாவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே சுசீலா தனது வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். நண்பர்கள் உதவியோடு இருவரும் திருத்தணி கோவிலுக்கு சென்று திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் முறையாக திருமணம் பதியப்படாமல் திருமணம் செய்துவைக்க மாட்டோம் என கோவில் நிர்வாகத்தினர் சொல்லிவிடவே அங்கிருந்த விக்கிரகத்தின் முன் சுசீலாவுக்கு தாலி கட்டியுள்ளார் மதன் பாப் . இருவரது வீட்டினரும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்காததால் கடும் போராட்டங்களை கடந்து தான் தங்கள் திருமண வாழ்க்கையை நடத்தியுள்ளார்கள். 

தனது சிரிப்பால் மக்களை மகிழ வைத்த கலைஞர் மதன் பாப். ஃப்ரண்ட்ஸ் , உன்னை நினைத்து , பிரியமான தோழி , பூவே உனக்காக என பல படங்களில் ஒரு சில காட்சிகளே என்றாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டு செல்வார். அவரது இறப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பே. தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மதன் பாப் இறப்புக்கு தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.