மாணவர்கள் மத்தியில் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களைத் தவிர்க்க, பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழுவின் (NCPCR) பரிந்துரையின் அடிப்படையில், இந்த முன்னெடுப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் எடுத்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:
மாணவர்கள் நடமாடும் பகுதிகளில் அதிக திறன் சிசிடிவி கேமராக்கள்
மாணவர்களுக்கு பள்ளியில் ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நமது கடமை. மாணவர்களின் நலன்கருதி, கழிப்பறை தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் நடமாடும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும்.
இதில் எல்லா விதமான துன்புறுத்தல்கள், மனநல, சமூகப் பிரச்சினைகள், வன்முறை, பேரழிவுகள், விபத்துகள், தீ போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும். கிண்டல் அடிப்பது, மாணவர்களுக்கு சுயமரியாதைக் குறைவையும் அவர்களின் நல்வாழ்வு குறித்த தினசரி மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இது சிசிடிவி கேமராக்கள் மூலம் தவிர்க்கப்படும்.
அவற்றை சரியாக பராமரிப்பதோடு, அந்த சிசிடிவி பதிவுகளை சுமார் 15 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆயிரம் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
நாடு முழுவதும் சுமார் 28 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் 580 பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.