இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் திடீர் மறைவைத் தொடர்ந்து மாரிமுத்துவின் பள்ளி ஆசிரியர்கள் அவர் குறித்து பேசிய வீடியோ பலரது மனதையும் உருக வைத்துள்ளது.
மக்களைக் கவர்ந்த ஜி.மாரிமுத்து
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வந்த மாரிமுத்து, நேற்று முன் தினம் (செப்டம்பர்.08) ‘எதிர் நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் ஸ்டூடியோவில் இருந்து பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இது திரையுலக பிரபலங்கள், ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைவரும் நேரிலும், சமூக வலைதளத்திலும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் மாரிமுத்து உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள பசுமலைத்தேரி கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாரிமுத்து மறைவு செய்தியால் சொந்த ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
மாரிமுத்துவின் ஆசிரியர்கள்
மாரிமுத்து குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் உள்ள ஜி.ஆர்.வரதராஜுலு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாரிமுத்துவின் பள்ளி ஆசிரியர்கள் மாரிமுத்து குறித்து பேசிய வீடியோ இணையதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கலை ஆர்வத்தால் படிப்பை கைவிட்டார்
அந்த வீடியோவில் ஆசிரியர்கள் கூறுகையில், ”மாரிமுத்து நன்றாக படிக்கக் கூடியவர். அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை கொடுப்பவர். தனது படிப்பின் மீது கவனம் செலுத்தியிருந்தால் இன்று அவர் வேறு ஒரு உயரத்திற்கு சென்றிருப்பார். ஆனால் கலையின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தினால் தனது படிப்பை நிறுத்திவிட்டு சென்னை புறப்பட்டார்.
பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அதன்பின்னர் நடிகராக பிரபலமானப் பின் அடிக்கடி தங்களது பள்ளி விழாக்களுக்கு வந்தார். சமீபத்தில் நடந்த தங்களது பள்ளி ஆண்டு விழாவிற்கு வந்து போனார். ஓரளவிற்கு பிரபலமடைந்து நல்ல நிலைமைக்கு அவர் வந்துகொண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தது தங்களுக்கு தாங்கமுடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அவரது குடும்பத்தினருக்கு எந்த அளவிற்கு ஒரு பேரிழப்பாக இது இருக்கும். கடவுள்தான் அவர்களை இந்த துயரத்தில் இருந்து அவர்களை மிட்டெடுக்க வேண்டும்” என்று அந்த பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.