தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ பாலிவுட் சினிமாவில் 'ஜவான்' திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு, சஞ்சய் தத், பிரியா மணி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கிலும் 10 ஆயிரத்துக்கும் மேலான திரையரங்குகளில் வெளியானது. அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்து வெளியான நாள் முதல் ட்ரெண்ட்டிங் லிஸ்டில் கலக்கி வருகிறது. இப்படம் மூலம் நடிகை நயன்தாராவும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவான் கலெக்ஷன்:
படத்தின் ரிலீசுக்கு முன்னர் வெளியான ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்துமே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீசுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. வரலாறு காணாத அளவுக்கு டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்த 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரைவிருந்தாக அமைந்தது.
வெளியான முதல் நாள் முதல் வசூல் வேட்டையை துவங்கிய ஜவான் திரைப்படம் ஒரு நாள் வசூல் விகிதத்திலும் வரலாறு படைத்துள்ளது. வெளியான முதல் நாளே ரூ.129 கோடி வசூலித்த ஜவான் திரைப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூல் விகிதத்தின் அடிப்படையில் ஏறு முகம் கண்டு வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களையும், பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ள ஜவான் திரைப்படத்தின் ஹிந்தி வர்ஷனில் ஒரு நாள் வசூல் 68.72 கோடியை எட்டியுள்ளது. அதே போல உலகளவில் ஒரு நாள் வசூலாக 144.22 கோடி வசூலித்து இதுவரையில் எந்த படமும் செய்யாத மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
மேலும் உலகளவில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக 384.69 கோடி பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது வெறும் ஆரம்பம்:
இந்த சந்தோஷமான அறிவிப்பை ஜவான் படத்தின் இயக்குநர் அட்லீ தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். "ஜவான் வரலாறு படைத்தது. இது ஆரம்பம் மட்டுமே!" என சந்தோஷத்தின் களிப்பில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். வார இறுதி நாட்கள் என்பதால் இந்த வசூல் விகிதம் மேலும் அதிகரிக்ககூடும் என திடமாக நம்புகிறார்கள் படக்குழுவினர்.
மாபெரும் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் வரலாறு காணாத சாதனை படைத்து வரும் ஜவான் படத்தின் வெற்றியை சோசியல் மீடியா எங்கும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள் திரை ரசிகர்கள். பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ள ஜவான் திரைப்படம் இயக்குநர் அட்லீக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்துள்ளது.