வஷு மற்றும் ஜாக்கி பக்னானி தயாரிப்பில் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் இந்தியில் ’பெல்பாட்டம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. அக்ஷய் குமார், ஹுமா குரேஷி, வானி கபூர், லாரா தத்தா எனப் பெரும் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. 1980களில் நடக்கும் ஸ்பை த்ரில்லர் வகையறா கதையாக இந்தத் திரைப்படம் உருவாகிவருகிறது.
1984-ஆம் ஆண்டில் மக்கள் பயணம் செய்யும் இந்திய விமானம் ஒன்று கடத்தப்படுகிறது. அடுத்த காட்சியிலேயே பிரதமர் இந்திரா காந்தி அவரது ஆலோசகர்களுடன் இந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது எனக் கலந்தாலோசிக்கிறார். அந்த ஆலோசனையில் ‘பெல்பாட்டம்’ என்கிற பெயர் கொண்ட ’ரா’ உளவாளி குறித்து பரிந்துரைக்கிறார்கள். காட்சி அப்படியே அக்ஷய் குமாரிடம் நகர்கிறது. கட்டைக்குரலில் கண்களைச் சுருக்கி க்ளைஷே வசனங்கள் பேசும் அக்ஷய் குமாரின் கதாப்பாத்திரங்கள் அனைவருக்குமே பழக்கப்பட்டதுதான் என்றாலும் இந்த் ட்ரெய்லரில் மொத்த கவனத்தையும் ஈர்த்தது என்னவோ இந்திரா காந்திதான். இந்திரா காந்தியின் கதாப்பத்திரத்தை ஏற்று நடித்தது வேறு யாரும் அல்ல முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான லாரா தத்தா.
ட்ரெய்லர் வெளியீட்ட பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிலர் லாரா தத்தா இந்தப் படத்தில் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு அவர் அடையாளமே தெரியாமல் இந்திரா காந்தியாகவே மாறியிருக்கிறார். ’இயக்குநர் என்னை அழைத்து இந்தப் படத்தில் நீங்கள் இந்திரா காந்தியாக நடிக்கிறீர்கள் என்றார். நான் அப்போது ஸ்க்ரிப்ட் என்னவென்று கூடக் கேட்கவில்லை. ஆனால் ஒரு பெரிய ஐகானின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம் என்கிற பொறுப்புணர்வு இருந்தது. அவரது பதவிக்காலத்தில் நிகழ்ந்த விமானக்கடத்தல் சம்பவம்தான் கதை. அவரது பாத்திரத்தில் நடிக்க நிறைய ஹோம்வொர்க் செய்யவேண்டி இருந்தது. ஆனால் இது என் வாழ்நாளுக்கான கதாப்பாத்திரம்’ என்றார்.
இதில் வாணி கபூர் அக்ஷய்குமார் கதாப்பாத்திரத்தின் மனைவியாக நடிக்கிறார். ’பெருந்தொற்று காலத்தில் ஒரு படத்தில் நடித்தது த்ரில் அனுபவம். நான் இந்தக் குழுவுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார். ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு பேசிய அக்ஷய் குமார், ‘ஹோட்டலில் உணவு சாப்பிடுவதற்கும் அதையே ஹோம் டெலிவரி செய்து சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வீட்டில் டிவியில் மட்டுமே எத்தனை நாளைக்குதான் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது. மக்கள் விரைவில் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.