லால் சிங் சத்தா திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பிரபலங்கள் கூறிய கருத்தை பார்க்கலாம்.


அமலாபால்


லால் சிங் சத்தா படத்தை பார்த்த நடிகை அமலாபால், “ லால் சிங் சத்தா மிகவும் அழகாக இருக்கிறது. நான் அமீர்கான் சாரின் மிகப் பெரிய ஃபேன். அவரது நடிப்பில் இருந்து பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். அவர் ஒரு நடிப்புக்கான பள்ளி என்றே சொல்லலாம். படம் மிக நன்றாக இருக்கிறது” என்றார். 


சரத்குமார்


நடிகர் சரத்குமார் பேசும் போது, “ லால் சிங் சத்தா மிக நன்றாக இருக்கிறது. படத்தில் நல்ல கனெக்ட்  இருக்கிறது. படத்தை இயக்குநர் அழகாக, கோர்வையாக எடுத்து இருக்கிறார். 


பார்த்திபன்


நடிகர் பார்த்திபன் கூறும் போது, “அமீர்கான் முதலில் ஒரு நல்ல மனிதர். அன்பை பரப்புவதற்கு 100 படங்கள் எடுத்தாலும் இப்படி ஒரு படைப்பை கொடுத்திருக்க முடியாது. படம் முழுக்க நான் அழுது கொண்டே இருந்தேன். இந்தக்காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையான படம்.” என்றார். 


நடிகை வரலெட்சுமி


நடிகை வரலெட்சுமி பேசும் போது, “  ஃபாரஸ்ட் கம்ப் ஒரு கிளாசிக் சினிமா. அதை இப்படி அழகாக ரீமேக் செய்வது அமீர்கானால் மட்டுமே செய்ய முடியும். படம் மிக நன்றாக இருக்கிறது.” என்றார்.


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது. அமீர் கான்,  கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.


நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். 


 






முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில்  ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார் . அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது.


அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற  ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் அது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. 


இதற்கு பதிலளித்த நடிகர் அமீர்கான், “ இது போன்ற  பாய்காட் பாலிவுட்.. பாய்காட் அமீர்கான்.. பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை.


நாட்டை நேசிக்கிறேன்


நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன். நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துர்திஷ்டவசமானது. மேலும் தனது ரசிகர்களிடமும், பார்வையாளர்களையும் கேட்டுக்கொண்ட அமீர்கான், “ ஆனால் அது அப்படி இல்லை என்றும் தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்று பேசினார்.