ஐஸ்வயா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு லால் சலாம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இவர்களை தவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இதை ஒட்டி ரஜினி மொய்தீன் பாயாக இருக்கும் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் லால் சலாம் படத்தை தமிழில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. லால் சலாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி லால் சலாம் படத்தின் டீசர் நாளை மறுநாள் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 34 நிமிடங்கள் இருக்கும் அறிமுக வீடியோ தீபாவளி அன்று வெளியாகும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லால் சலாம் படம் ரிலீசாகும் நேரத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படமும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி, தனுஷ் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே, ரஜினி நடித்த ஜெய்லர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் நடித்துள்ள லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
மேலும் படிக்க: Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!