விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை ஒட்டி போஸ்டர் மூலம் லால் சலாம் மற்றும் ஆர்யன் படக்குழு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால் நீர்பறவை, குள்ளநரி கூட்டம், வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தி இருப்பார். இதை தொடர்ந்து ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு எடுக்கப்படும் லால் சலாம் படத்தில் லீட் கேரக்டரில் விக்ராந்த் உடன் இணைந்து விஷ்ணு விஷாலும் நடித்துள்ளார். சென்னை, திருவண்ணாமலை, மும்பை பகுதிகளில் ஷீட்டிங் முடிந்த நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. லால் சலாம் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படத்தின் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். அதன் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இன்று 39 வது பிறந்த நாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து கூறும் விதமாக, அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லால் சலாம் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கிரிக்கெட் உடையுடன் விஷ்ணு விஷால் காணப்படுகிறார். விஷ்ணு விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஐஸ்வரியா ரஜினிகாந்த், 18 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்தது என்றும், அதன்பிறகு இரண்டு கேக்குகள் வாங்கியதாகவும், ஒன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவும், மற்றொன்று லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடவும் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ஆர்யன் படத்தில், அவரது கேரக்டரும் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த பிரவீன் இயக்கும் ஆர்யன் படம் திரில்லர் கதையை கொண்டது. இதில் செல்வராகவன் வில்லனாக நடிக்க, வாணி போஜன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
இதேபோன்று மோகன் தாஸ் படக்குழுவும் விஷ்ணு விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும், நண்பர்களும் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.