தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 2015ம் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்ஸி நடிப்பில் 'வை ராஜா வை' படத்தை இயக்கி இருந்தார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. 


சிறப்பு தோற்றத்தில் ரஜினி - கபில்:  


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் கூட சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் என பான் இந்தியன் படமாக வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 


 



ரசிகர்கள் ஏமாற்றம் : 


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் டீஸர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் லால் சலாம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்து இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.   


புதிய அப்டேட்:  


பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி போகும் எனக் கூறப்பட்டது. அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.


 






பிப்ரவரியில் ரிலீஸ் : 


'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.