தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் முதல் விதைப்பாக உளுந்து, பாசி, பருத்தி, மக்கா, வெள்ளைச்சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி சூரியகாந்தி போன்ற பயிர்கள் பயிரிட்டு உள்ளனர். மழை மாதம் மாறி குளிர் மாதமான மார்கழியில் கடைசி விதைப்பாக சூரியகாந்தி, கொத்தமல்லி போன்றவை விதைத்தனர். கடந்த 2021ம் ஆண்டு வடமாநிலங்கள் மற்றும் சூரிய காந்தி விதைப்பண்ணை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம்,மகாராஸ்டிராவில் சூரிய காந்தி சாகுபடி பெரு மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது.




வெளி மாநிலங்களில் இருந்து விதை வரத்து இல்லாததால் தமிழகத்தில் சூரிய காந்தி விதை கிடைக்கவில்லை. வடமாநிலங்களில் இருந்து ஒருசில விவசாயிகள் மிகுந்த தட்டுப்பாடுக்கு மத்தியில் விலாசமில்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தனர். சராசரியாக ஏக்கருக்கு ஐந்து முதல் எட்டு குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டியதில் அதிக பட்சமாக ஒரு குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்தது. முளைத்து நாற்பத்தைந்தாவது நாள் முதல் பூ பிடிக்க துவங்கி படிப்படியாக நிலத்தின் சத்துக்கேற்றவாறு மணி திரட்சியாகும். சராசரியாக ஏழு இன்ச் சுற்றுவட்ட அளவிற்கு சூரியகாந்தி பூ இருக்க வேண்டும்.




பெங்களூர் விவசாய பல்கலை கழகத்தில் இருந்து இந்தாண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதற்காக இரண்டு கிலோ எடை உடைய சூரியகாந்தி பை தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் சுமார் நாற்பது டன் கொள்முதல் செய்துள்ளது. ஒவ்வொரு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இரண்டு கிலோ பை ரூபாய் 1200 / = க்கு விற்பனை செய்யப்பட்டது. தனியார் விதைக்கடைகளில் இரண்டு கிலோ சூரியகாந்தி விதை ரூபாய் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை விற்பனை செய்வதால் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் வாங்கி விதைத்தனர். நாற்பத்தைந்தாவது நாளில் பூ பிடிக்க வேண்டியவை பத்து நாட்களுக்கு முன்னதாக இரண்டு இன்ச் சுற்றளவில் பூ பிடித்துசுருங்கி போயுள்ளது. இதனால் மகசூல் வெகுவாக குறையும். இது விதையின் குறைபாடா அல்லது இயற்கையின் மாற்றமா என தெரியவில்லை.




கடந்த 2021ம் ஆண்டு விதை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் தமிழக அரசு முன்னேற்பாடாக கடந்த வருடம் மத்திய அரசு விதை நிறுவனமான நேஷனல் ஸீடு கார்ப்பரேஷன் மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்துவிவசாயிகளுக்கு வழங்கிய சூரிய காந்தி விதை, சராசரியாக ஐந்து முதல் எட்டு குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது இதை நம்பியே இந்தாண்டும் வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்ட விதைகளை வாங்கி விதைப்பு செய்தனர்.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, “இந்தாண்டு கோவில்பட்டி கோட்டத்தில் மட்டும் சுமார் இருபாதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சூரிய காந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் மழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் கடைசி நம்பிக்கையாக சூரியகாந்தியை சாகுபடி செய்தனர். தற்போது அதுவும் கை கொடுக்க வில்லை. எனவே வேளாண்மைதுறை அதிகாரிகள் சூரியகாந்தி பயிரிட்ட நிலங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.