பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.


ரஜினியின் நண்பன் சரண் ராஜ்




80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள சரண் ராஜ், சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான லேபிள் சீரிஸிலும் நடித்துள்ளார்.


கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த பணக்காரன், தர்மதுரை, அதிசய மனிதன், பாட்ஷா உள்ளிட்ட படங்கள் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொரு முகமாக மாற்றின.



ஈவு இரக்கமற்ற வில்லன், போலீஸ், உற்ற நண்பன் என பல துணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த சரண் ராஜ், 1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


பாட்ஷா கதாபாத்திரம்



பாட்ஷா படத்தின் அடிநாதமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மாணிக்கமாக வரும் நடிகர் ரஜினிகாந்தின் நண்பன் பாட்ஷாவாக உயிர்விடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கு காரணமான முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சரண் ராஜ், நிஜ வாழ்விலும் ரஜினிகாந்தின் உற்ற நண்பர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.


இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் தற்போது நடித்துள்ள சரண் ராஜ். சுமார் 29 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்த அனுபவம் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவுடன் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய சரண்ராஜ் கூறியுள்ளதாவது:


லால் சலாம் கதாபாத்திரம்


“ரஜினி சார் பல முறை சொல்லுவார். “என்னடா உன் கூட நடிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சு, ஒரு நல்ல கேரக்டரா இருந்தா கூப்பிடு” அப்படினு சொல்லுவார். இருடா நாம பண்றோம் என சொல்லுவார், இப்போ லால் சலாம் கதாபாத்திரத்தில் அவர் நண்பனா நடிக்கறேன்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


மராட்டிய மொழி பின்புலத்தை ரஜினி, சரண் ராஜ் இருவருமே கொண்டுள்ள நிலையில், இருவருக்கும் பல ஒற்றுமைகள் ஆஃப் ஸ்க்ரீனிலும் உள்ளன. அதனால் தான் தாங்கள் இருவரையும் பாட்ஷாவில் ஒன்றாக நடிக்க வைத்ததாகவும் சுரேஷ் கிருஷ்ணா இந்த நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.






இந்நிலையில் ரஜினி - சரண் ராஜ் இருவரையும் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்றாக திரையில் பார்ப்பது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.


பாட்ஷா படத்துக்குப் பிறகு இஸ்லாமியராக மொய்தீன் பாய் எனு கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். தன் மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில் நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.