நடிகர் விஷ்ணு விஷாலில் சகோதரரான ருத்ரா ’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


விஷ்ணு விஷால்


வெண்ணிலா கபடிக் குழு, குள்ள நரிக்கூட்டம் , நீர்ப்பறவை, ஜீவா, மாவீரன் கிட்டு, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தும் விஷ்ணு விஷால், திரை உலகின் பல்வேறு தோல்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்த சவால்களில் இருந்து மீண்டு தன்னை எப்போதும் பாசிட்டிவாக வைத்துக் கொள்ள முயற்சிப்பவர் விஷ்ணு விஷால்.


சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தனது அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.


கதாநாயகனாக அறிமுகமாகும் ருத்ரா






விஷ்ணு விஷாலைத் தொடர்ந்து தற்போது அவரது சகோதரர் ருத்ராவும் திரையில் அடியெடுத்து வைக்கிறார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கும் ‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ருத்ரா.


இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா, முதல் நீ முடிவும் நீ படங்களுக்கு இசையமைத்த தர்புக்கா சிவா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு தனது சகோதரர் ருத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.


மேலும் இப்படத்தில் சென்ற சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நிவாசினியும் நடிக்க உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நிவாசினி பகிர்ந்துள்ளார்.


 






விஷ்ணு விஷால் நடிக்கும் படம்


2022ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும் இந்தப் புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது. 


மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும்.  இந்தப் புதிய திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள், தற்போது தொடங்கி பரபரப்பாக  நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது