பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதை அடுத்து நாடு முழுவதும் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அதற்கான பணிகளை தொடங்கி தற்போது விறுவிறுப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை மும்முனைப் போட்டி என கருதப்படுகிறது. அதாவது திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக ஒரு கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி ஒரு கூட்டணியாகவும் தமிழகத்தில் உள்ள புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது தேர்தல் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். குறிப்பாக திமுக தலைமைக் கழகத்தின் சார்பாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே நிலையில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.




 


இப்படி மாநிலத்தில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் பஞ்சமில்லாத கரூர் மாவட்ட அரசியல் நிலைமை வேறு விதமாக உள்ளது. அதிலும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணிக்கு தற்போது வரும் தேர்தல் மிகுந்த ஒரு சவாலான தேர்தலாகவே விளங்குகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணி பல்வேறு இடங்களில் கடந்த ஆறு மாத காலமாக நலத்திட்ட உதவிகள், மாணவர் மத்தியில் உரையாடல் மற்றும் கட்சி நிர்வாகிகளினை சந்தித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான திமுகவிடம் ஒத்துப் போகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


 


 




இது ஒருபுறம் இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் திமுக தலைமை மாவட்ட வாரியாக தங்கள் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது கரூர் மாவட்டத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தொகுதி ஜோதிமணிக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என ஒட்டுமொத்தமாக தங்களது மனுவாக எழுதி கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்த பிரச்சனை முடிவதற்குள் மீண்டும் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது அது என்னவென்றால் தற்போது அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி புதிதாக பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்துக்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான தீர்மானங்கள் தற்போது கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் மேல் பெற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்ற ஒருவராக இருக்கும் ஜோதிமணிக்கு எதிராகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என மாநில தலைமைக்கு தீர்மான நகலை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சரிவர மதிப்பது இல்லை எனவும் தன்னிச்சையான போக்கை கையாளுவதாகவும் மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் பங்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


 




 


இதற்கு மேலாகவும் கரூர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் பேங்க் சுப்ரமணியம் என்பவர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தைப் பற்றி விரிவாக கூறினார். அப்பொழுது தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடந்த ஆறு மாதமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அவருக்கு உரிய முறையில் பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைப்பதில்லை. அதேபோல் கட்சி நிர்வாகிகளையும் அவர் கலந்து ஆலோசிப்பதில்லை எனவே மீண்டும் அவருக்கு சீட்டு வழங்க வேண்டாம் என தெரிவித்ததுடன் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார். காலை தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் மதியம் வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. கடந்த முறை திமுக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் ஜோதி மணிக்கு இரவு பகல் பாராமல் செந்தில் பாலாஜி தேர்தல் பணியாற்றி நாலு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்தார் என்பது அனைவரும் அறிந்த நிகழ்வு.


 


 




இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி தற்போது களத்தில் இல்லாதபோது எப்படி கரூர் பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என திமுக தலைமை யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு திமுக மற்றும் அவரது கட்சி இருந்த நிர்வாகிகள் இடையே ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் கரூர் பாராளுமன்ற தொகுதி இந்த முறை திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமா அல்லது திமுகவுக்கு வழங்கப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருந்தபோதும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது டெல்லி வட்டார நட்புடன் பேசி மீண்டும் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட முயற்சிகள் மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


 




தமிழகத்தை பொறுத்தவரை கரூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகவும், மிக முக்கிய தொகுதியாக கருதப்படுகிறது ஏனெனில் பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊர் கரூர் மாவட்டம், அதே நிலையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சொந்த ஊர் கரூர். மேலும் அரசியலில் ஆணிவேர் என்று கருதப்படும் செந்தில் பாலாஜி சொந்த ஊர் கரூர். இப்படி மும்மூர்த்திகளின் பிறப்பிடமாக கரூர் திகழ்வதால் கரூர் மாவட்டத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைத்து விட்டார் என பரமத்தியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் தனது ரத்தத்தால் கடிதத்தை மாநில தலைமைக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.