நடிகர் ரஜினிகாந்த் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் - விக்ராந்த் என நிஜ வாழ்விலும் கிரிக்கெட்டில் தேர்ந்த இரண்டு நடிகர்களைக் கொண்டு, கிரிக்கெட்டை மையப்படுத்தி ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர 80ஸ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகள் நிரோஷா, ஜீவிதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில் எனப் பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தேர் திருவிழா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கேட்கும்போது கிராமப்புறத் திருவிழாவை நினைவூட்டும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை நிரப்பி வருகின்றனர்.