ஜீ தமிழ் தொலைக்காட்சியின் போட்டியாளர் லேடி காஷ்  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் சர்வைவர். இதனை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்சியை போலவே இருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தீவு ஒன்றில் இந்த ஷோ நடைப்பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணியாக பிரிந்து போட்டியில் பங்கேற்று வருகின்றனர். 90 நாட்கள் நடைபெறும் இந்த ஷோவானது நாளுக்கு நாள் போட்டியாளர்களை கடினமான டாஸ்கிற்குள் தள்ளி வருகிறது.  முன்னதாக போட்டியில் இருந்து  நடிகைகள் இந்திரஜா மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் அவர்களது அணியினரால் வெளியேற்றப்பட்டர். இந்நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த ராப் பாடகி லேடி காஷ் (கலைவாணி) போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இது குறித்து கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் சர்வைவர் நிகழ்ச்சியில் உயிரை பற்றி யாரும் கண்டுக்கொள்வதில்லை, எங்களில் உயிருக்கு அங்கு  மதிப்பில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த பதிவு ஒன்றில் , ”தான்சானியா தீவில் கடந்த செபடம்பர் 24 ஆம் தேதி மூன்று போட்டியாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தோம். எங்களுக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக தோன்றியது. இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடன் நாங்கள் தெரிவித்தோம் . ஆனால் தான்சானியாவில் யாருக்கும் கொரோனாவே இல்லை என்பதாக கூறி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை. அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர் (அர்ஜூன்) வேண்டுகோளின் பேரில் எங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தார்கள் , அதில் எனக்கு நெகட்டிவ் என வந்தது. ஆனாலும் நெஞ்சு இருக்கம் , இருமல், குளிர் நடுக்கம், உடல் வலி மற்றும் சோர்வு போன்ற கோவிட் அறிகுறிகள் அனைத்தும் எனக்கு இருந்தன. எனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த போதும் கூட என் உடல்நிலை சரியில்லை என்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது. என்னால் எப்போதாவதுதான் நிற்க முடிந்தது.


 






செப்டம்பர் 24 ஆம் தேதி நாங்கள் ஹோட்டல் ஒன்றில் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டோம். எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் எங்களை பேச அனுமதிக்கவில்லை. பிறகு வீட்டில் பேச வேண்டும் என  கெஞ்சினோம். மூன்று நாட்களுக்கு பிறகே எங்களை வீட்டில் பேச அனுமதித்தார்கள் . அதன் பிறகு 27 ஆம் தேதி மூன்று போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. அவர்கள் அனைவரும் நெகட்டிவ் ரிசல்ட் வரும் வரையில் விடுதியில் தங்கி ஓய்வெடுப்பார்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். எனக்கு நெகட்டிவாக வந்திருந்தாலும் என் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை எனக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. உடனடியாக விளையாட்டிற்கு திரும்புங்கள் அல்லது நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள் என தெரிவித்து விட்டனர். என் உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் அங்கிருந்து வெளியேறினேன். எனது செலவினங்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு பொறுப்பேற்கவில்லை. மாறாக எனது நிர்வாகம்தான் எனது செலவை பார்த்துக்கொண்டனர். அவர்களை பொறுத்தவரையில் இனிமேல் நான் அவர்களுக்கு தேவைப்படமாட்டேன் . அவர்கள் இன்வெர்ஸ்மெண்டை மட்டுமே பார்க்கின்றனர். போட்டியாளர்களின் நலனை அல்ல. இன்றுவரை, நான் உயிருடன் இருக்கிறேனா அல்லது சான்சிபார் விமான நிலையத்திற்குச் சென்று பாதுகாப்பாக சென்னைக்கு சென்றேனா என்று  யாரும் கேட்கவே இல்லை.




உண்மையும் நீதியும் எப்போதும் வெல்லும் என்ற என் நம்பிக்கைக்கு ஏற்ப, இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் கணக்கற்ற (மற்றும் கணக்கிடப்படாத) அநீதி மற்றும் தொல்லைகளுக்கு எதிராக போராட என் குழுவும், எனது குடும்பமும் நானும் இந்த பயணத்தை மேற்கொள்ள உங்கள் ஆதரவை  எதிர்பார்க்கிறேன். நேர்மையான முயற்சிகள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகும் நிகழ்ச்சியில் தொடர என்னை  அனுமதிக்காதது  ஏமாற்றமாக இருந்தபோதிலும், இதுபோன்ற அநீதியை அனுபவித்த  ஆண் அல்லது பெண்ணின் சார்பாக இந்தப் போரில் ஈடுபட நான் முடிவு செய்திருக்கிறேன் “ என தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பு நிர்வாகம் என்ன மாதிரியான விளக்கம் அளிக்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.