Laandhar Movie Audio Launch: தமிழ் சினிமாவில் யதார்த்த நாயகனாக தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வரும் நடிகர் விதார்த் நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ.ஆர்.கே.சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் நடிகர் பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும் படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எம்.எஸ்.பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் வகையிலான இந்தத் திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன் பேசுகையில், ''சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். மாணவர்கள் முன்னிலையில் என்னை மேடையேற்றி பாடுமாறு ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் பாட முடியவில்லை. அப்போது அந்த ஆசிரியர், 'இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நீ நன்றாகப் பாடுவாய்' என ஊக்கமளித்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால் எனக்கு அது மிகப் பெரிய தோல்வியாக மனதில் பட்டது. மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழுவதும் பயிற்சி அளித்தார்கள். மேடை ஏறி ஒரு வரியைக்கூட பாடாமல் இறங்கி விட்டேன். இதனால் எனக்கும் இசைக்கும் தொடர்பே இல்லை என நினைத்து விட்டேன்.
சிறிது நாள் கழித்து நான் விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு ஒருவர் பழைய ஹார்மோனிய இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் “என்னைப் பார்த்து இசைக்கிறாயா?’ என கேட்டார். இல்லை எனக்கும் இசைக்கும் வெகு தூரம் என்று சொல்லிவிட்டு, அவர் வாசிப்பதை தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அவர் சிறிது நேரம் வாசித்து விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது ஹார்மோனியத்தை வாசித்துப் பார்க்கலாமே என வாசிக்கத் தொடங்கினேன்.
அப்போது யதார்த்தமாக ஓடிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப என்னுடைய கைவிரல்கள் தானாகவே ஹார்மோனியத்தில் வாசிக்கத் தொடங்கின. ஒரு புள்ளியில் தான் நான் அதனை கவனித்தேன். எனக்கும் இசை வருமென்று உணர்ந்தேன். பாடல்களைக் கேட்டு வாசிக்க முடியும் என நம்பினேன். அப்போதுதான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. ஒரு நாள் 'ராட்சசன்' பட வெளியீட்டின் போது இயக்குநர் சாஜி சலீமை சந்தித்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது, முதலில் எங்களது பாடல்களை கேட்டார். ஒரு பாடலை திரும்பத் திரும்பக் கேட்டார் அப்போது 'இந்த இடம் நன்றாக இருக்கிறது. இந்த வரி நன்றாக இருக்கிறது' என தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருந்தார். ஒரு கலைஞருக்கு பாராட்டு தான் சிறப்பாக இயங்க வைப்பதற்கான எனர்ஜி.
ஆறு வருட தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் 'லாந்தர்' படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். இந்தப் படத்திற்கான முதல் பாடலை இசையமைத்து அவரிடம் வழங்கிய போது, அதைக் கேட்டு அவர் மெலிதாக புன்னகைத்தவுடன் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணம் எங்களுக்குள் ஏற்பட்டது.' எனப் பேசியுள்ளார்.
படத்தின் நாயகி ஸ்வேதா டோரத்தி பேசுவையில், ''லாந்தர் என்பது இரவின் அடையாளம். இந்தப் படம் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காகவே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். படத்தின் இசையமைப்பாளரான பிரவீனின் பாடல்களுக்கு நான் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். தூய தமிழில் பாடல்களை வழங்கியதற்காக பாடலாசிரியர்கள் தேவா மற்றும் உமாதேவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், ''படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது முதல் படம். அதனால் தங்களது இந்த படைப்பை உயிரைக் கொடுத்து உருவாக்கி இருப்பார்கள். தயாரிப்பாளருக்கும் இது முதல் திரைப்படம் என்பதால் அவரும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார். இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது முயற்சி எனக்கு வியப்பை அளித்தது. அவரிடம் யாராவது அரை மணி நேரம் பேசினால் போதும், அவரிடம் அவ்வளவு கதைகள் உள்ளன. வித்தியாசமான கதாபாத்திரங்களை பற்றியும், கதைக்கு தேவையான விஷயங்களை பற்றியும் விரிவாக சொல்வார்.
நடிகர் விதார்த்திற்கு நன்றி. அறிமுகமற்ற படைப்பாளிகளை கூட, அவர்களுடைய உணர்வுகளை மதித்து கதையைக் கேட்டு, மிக எளிமையாக பழகும் நபர் அவர். அதனால் அவருடன் இன்று வரை ஒரு நல்ல நட்பு தொடர்கிறது,'' எனப் பேசியுள்ளார்.