ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிவரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் கதாநாயகனான விஷ்னு விஷால் தனது எதிரிகளுக்கு சவால் விடும் வகையிலான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு யாரைக் குறிப்பிடுகிறது என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கும் எழாமல் இல்லை.


லால் சலாம்


3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது லால் சலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்


 லால் சலாம் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் இந்த படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் கேரக்டரில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பாஷா பாயாக நடித்த ரஜினி இந்தப் படத்தில் மொய்தீன் பாயாக தோன்றுவதை பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  லால் சலாம் படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகின.


யாரிடம் சவால் விடுகிறார் விஷ்ணு விஷால் ? 






ரஜினியின் காட்சிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவுடன் சேர்ந்து ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட நடிகர் விஷ்னு விஷால் மிக நீண்ட பதிவு ஒன்றை சேர்த்து பதிவிட்டுள்ளார் அதில் “என்னை பின்னுக்கு இழுக்க  நினைப்பவர்கள் , ஒவ்வொரு முறையும் எனது சமூக வலைதளத்தின் நான் எது சொன்னாலும் அதனை குறை சொல்பவர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். சிலர் தங்களது சுயநலத்திற்காக இன்னும் கீழ்மையான செயல்களை செய்துவருகிறார்கள். உங்களது முயற்சிகள் எல்லாம் வீணானது .  நீங்கள் என்னை மேலும் உயரத்திற்குச் செல்லவே ஊக்குவிக்கிறீர்கள். அதற்கு இதான் சாட்சி.  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அருகில் சேர்ந்து நிற்கும் இந்த வாய்ப்பு எனக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. தலைவருக்கு என்னுடைய நன்றி. உங்களிடம்  இருந்து வந்த பாராட்டுக்களை எனது சினிமா வாழ்க்கையில் நான் சேர்த்து வைத்துக்கொள்ளப் போகும் மிகப்பெரிய சொத்து.” என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.