விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தின் தோல்விக்கான நஷ்டத்துக்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுள்ளது அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம்.


குஷி


இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘குஷி’. இந்த படம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான மூன்று நாட்களிலேயே உலகளவில்  ரூ 70 கோடிகளை வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து முதல் வாரத்திற்குள்ளாக  ரூ 100 கோடி வசூலை படம் நெருங்கியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் குஷி படத்தின் வெற்றி கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ”தனது சம்பளத்தில் இருந்து 1 கோடியை 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமாக பிரித்து வழங்குவதாக தெரிவித்தார். இந்த குடும்பங்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும்” எனவும் கூறினார் எனது வெற்றி, மகிழ்ச்சி, சம்பளம் என அனைத்தும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என  நடிகர் விஜய் தேவரகொண்டா பேசினார்.


இது என்னடா புது சிக்கல்






குஷி படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் மகிழ்ச்சிக்கு தடையாக தற்போது புது பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா , ராஷி கன்னா, கேத்ரீன் டெரசா உள்ளிட்டவர்கள் நடித்து ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் வெளியானது இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய  தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தை கேரளத்தில் விநியோகம் செய்தது அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது அபிஷேக் பிக்சர்ஸ் கோரிக்கை ஒன்றை விஜய் தேவரகொண்டாவிடம் வைத்துள்ளது.


இந்தப் படத்தின் மூலம் தனக்கு ரூ 8 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஆனால் அதற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றும்  தற்போது குஷி திரைப்படத்தின் வெற்றியை, ஏழை மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து  கொண்டாடிவரும் விஜய் தேவரகொண்டா தங்களுக்கு இழப்பீடாக தன்னால் முடிந்த தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் விஜய் தேவரகொண்டா இழப்பீடு வழங்க வேண்டுமா கூடாதா என்கிற விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது.




மேலும் படிக்க: Super Singer Junior 9: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. கண்கலங்கிய ரசிகர்கள்..என்ன நடந்தது?