தென்னிந்திய சினிமாவில் 90களில் உச்சபட்ச நட்சத்திரமாக கோயில் கட்டும் அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்பூ தனது 8 வயதில் தந்தையால் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதை அவர் எவ்வாறு எதிர்த்து வெளியில் வந்தார் என்பது குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார். 


 



இது குறித்து சமீபத்தில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களின் இந்த மோசமான அனுபவம் பற்றி நீங்கள் மிகவும் தைரியமாக குரல் கொடுத்துள்ளீர்கள் . அதன் மூலம் நீங்கள் மக்களுக்கும் இன்றைய இளைய சமூகத்தினருக்கும் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.


இது போன்ற துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன? குஷ்பூ பேசுகையில் "நிச்சயமாக அவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். நான் அதை மிகவும் தாமதமாகவே வெளிப்படுத்தினேன். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனைகள், குடும்பம், இமேஜ் இப்படி பல காரணங்களால் உங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து  நீங்கள் வெளிப்படையாக பேச தயக்கம் இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் சொல்வதை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அன்று எங்களுக்கு தீர்ப்பு சொல்ல யாருமில்லை.  


வெளிப்படையாக இருக்க வேண்டும் :


இன்று சோசியல் மீடியா மூலம் நீங்கள் ட்ரோல் செய்யப்படலாம். உங்கள் மீது குற்றம் சொல்ல ஏராளமானோர் இருக்கலாம். ஒரு ஆணை தூண்டிவிடும் அளவுக்கு நீ என்ன செய்தாய் என்பது தான் பாதிக்கப்பட்டவரிடம் முன்வைக்கும் முதல் கேள்வியாக இருக்கும். இந்த எண்ணம் முதலில் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் சற்று சென்சிட்டிவாக இதை கையாள வேண்டும். எந்த வயதில் இருப்பவராக இருக்கட்டும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் அமைதியாக இருக்காமல் உடனடியாக அதை வாய்ஸ் அவுட் செய்ய வேண்டும்.


உங்களை மட்டும் நீங்கள் காயப்படுத்தி கொள்ளவில்லை. உங்களை இந்த நிலைக்கு தள்ளியவர்களை நீங்கள் காப்பாற்ற  செய்கிறீர்கள். அவர்களுக்கு நீங்கள் இது போன்ற அத்துமீறிய செயல்களை செய்ய பிளாட் ஃபார்ம் அமைத்து தருகிறீர்கள். இதன் மூலம் தான் செய்வது வெளியே தெரியவராது, மற்றவர்களுக்கும் இது போன்ற தொல்லைகளை கொடுக்கலாம், அவர்கள் வெட்கப்பட்டு அதை வெளியில் சொல்லமாட்டார்கள் என தைரியமாக சுற்றி வருவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? தப்பு செய்பவர்களை வெளிச்சம் போட்டு காண்பித்து அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும். 


 



தைரியம் எப்படி வந்தது ?


உங்களால் எப்படி இந்த விஷயத்தை இப்படி வெளிப்படையாக பேச முடிந்தது என்பது குறித்து பேசுகையில் " பல ஆண்டு காலமாக இது என்னுள் எரிந்து கொண்டே இருந்தது. நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். அவர்கள் நிச்சயமாக இது போன்ற பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டு இருந்தாலும் அவர்கள் அமைதியாகவே இருந்து விடுகிறார்கள்.


எனக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இதை பற்றி நான் வெளிப்படையாக பேசியுள்ளேன். எந்த ஓர் ஆணும் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது. கன்னத்தை தொட்டு பேசுவது கூற என்னை பொறுத்தவரையில் பாலியல் தொந்தரவு தான். இதை என் மகள்களுக்கு நான் சொல்லி கொடுத்துள்ளேன். எனக்கு நேர்ந்த தொல்லை குறித்து நான் சொன்ன போது எனது மகள்களும், கணவரும் எனக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றனர்.  ஒரு காயம் ஏற்பட்டால் அது எளிதில் சரியாகிவிடும் ஆனால் வடு அது மறையவே மறையாது. சுடுகாடு போகும் வரையில் அது வடுவாகவே உறுத்திக்கொண்டே இருக்கும்.ஊ


இவ்வாறு அவர் பேசினார்.