விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்த 39 பேரில் 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 


22 பேர் குணம்:


விஷச்சாராயம் அருந்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 22 பேர் குணமடைந்த நிலையில், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்த 14 பேர் பலியானார்கள். 55-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவமனை, மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சில காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 


விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள், புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவை தொடர்ந்து  மரக்காணம் போலீசார் கொலை வழக்காக மாற்றினார்கள்.


சி.பி.சி.ஐ.டி. விசாரணை:


இந்த நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.எஸ்.பி. கோமதி நியமிக்கப்படார். இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.எஸ்.பி. கோமதியிடம் வழங்கப்பட்டது.


 இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே விசாரணையை தொடங்கினர். அவர்கள் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரத்தில் முகாமிட்டு இந்த வழக்குதொடர்பாக ஆலோசனை நடத்தினர். சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.