Vatsan Chakravarthi - "குருதி ஆட்டம்" படத்தின் வில்லன் வத்சன் சக்கரவர்த்தியின் மிரட்ட வைக்கும் நியூ லுக் - 


ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் "குருதி ஆட்டம்". மதுரையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஒரு கபடி வீரராக நடித்துள்ளார். இயக்குனரின் முதல் படமான 8 தோட்டாக்கள் படம் போலவே இப்படத்திலும் உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ராதா ரவி, பிரியா பவனி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வத்சன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். 


வில்லன் கதாபாத்திரம்:


வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் வத்சன் சக்ரவர்த்தி. இப்படத்தில் தனது அனுபவம் குறித்த ஒரு நேர்காணலின் போது பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இவருக்கும் இயக்குனர் ஸ்ரீ கணேஷிற்கும் 8 தோட்டாக்கள் படத்தின் சமயத்தில் இருந்து நல்ல நட்பு இருந்திருக்கிறது. அப்போது "அர்ஜுன் சுரவரம்" என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார் வத்சன் சக்ரவர்த்தி. அந்த படம் நிறைவடடைந்த உடன் இவரை அழைத்து தலைமுடியை வளர்த்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக உயர்த்த முடியுமா என்று கேட்டுள்ளார் ஸ்ரீ கணேஷ். அவர்களின் சந்திப்பின் போது வத்சன் மொட்டை தலையாக இருந்துள்ளார். உடன் குருதி ஆட்டம் படத்தின் ஹீரோ அதர்வாவும்  இருந்துள்ளார். இப்படத்திற்கு நான் சரியான தேர்வா என்று எனக்கே முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனரின் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையால் இதை ஒத்து கொண்டு நடித்துள்ளார் வத்சன். நிஜ வாழ்க்கையில் கேங்க்ஸ்டர்களாக இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு இக்கதையை உருவாக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். என்னை மனதில் வைத்து எழுதியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்றார் வத்சன் சக்கரவர்த்தி. 


 



உடல் எடை அதிகரிப்பு:


மேலும் வத்சன் கூறுகையில் இப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் 81 கிலோவாக இருந்தவர் படத்திற்காக தனது எடையை 98 கிலோவாக அதிகரித்துள்ளார். சுமார் 120 நாட்கள் ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து இந்த உடல் கட்டமைப்பை கொண்டு வந்தேன். தற்போது மீண்டும் எடையை 75 கிலோவிற்கு குறைத்து விட்டேன். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என் மீது வைத்து இருந்த நம்பிக்கை எனக்கு மனநிறைவையும் ஊக்கத்தையும் தந்தது என்றார் வத்சன் சக்கரவர்த்தி. 


அதர்வா வியப்பு:


குருதி ஆட்டம் திரைப்படத்தின் ஹீரோ அதர்வாவை " கணிதன்" படத்தின் படப்பிடிப்பின் போதில் இருந்து தெரியும். அப்படத்தில் ஸ்கிரிப்ட் சார்ந்த பகுதியில் நான் இருந்ததால் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அதர்வாவே , இப்படத்திற்காக நான் என்னை தயார்படுத்தி கொண்ட மேக்ஓவர் பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்த அளவிற்கு அது ஒர்க் அவுட் ஆகும்  என்று நான் கூட எதிர்பார்கவில்லை என் மிகுந்த பூரிப்புடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் வத்சன் சக்கரவர்த்தி.