தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை 4 மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் அழித்து விட்டதாக தாக்குதலுக்கான சிவசங்கரன் குற்றம்சாட்டியுள்ளார்




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவர் பேராசிரியர் சிவசங்கரன். இந்தக் கல்லூரியில் பி.ஏ.கணிதம் 3ம் ஆண்டு படிக்கும் ராமர் என்ற மாணவரும், அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்துள்ளது மட்டுமின்றி இருவரின் பெற்றோருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.




இந்நிலையில், நேற்று காலையில் பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்த போது மாணவர் ராமர், அதே கல்லூரியில் படிக்கும் சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒருவர் என 4 பேர் எப்படி தங்களது காதலை பற்றி வீட்டில் சொல்லாலம் என்று கூறி வாக்குவாதம் செய்ததது மட்டுமின்றி சிவசங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவசங்கரன் மயக்கமடைந்தார். இதையெடுத்து அருகில் இருந்த மற்ற பேராசிரியர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மாணவர் சுரேஷ், சிவசுந்தரராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.


 



 


இதுகுறித்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் சிவசங்கரன் கூறுகையில், மாணவர்களின் காதலை கண்டித்தேன், அதற்கு கிடைத்த பரிசு தான் எனக்கு அடி உதை, தன்னை தாக்கிய காட்சிகள் கல்லூரியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் உள்ளதாகவும், அதனை காவல்துறை அழித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் ராமர், சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போன்று சுரேஷ், சிவசுந்தர ராமன் ஆகியோரிடம் பேராசிரியர் சிவசங்கரன் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு அடிப்படையில் பேராசிரியர் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து விசாரித்த போது, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், தற்போது கல்லூரியில் சாதிய பிரிவினை அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும் பெற்றோர்களும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண