தான் இயக்கி, அதர்வா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் தோல்வியில் இருந்து தான் மிகப்பெரிய பாடம் கற்றுள்ளதாகவும், நிச்சயம் தரமான ஒரு படைப்பை உருவாக்குவேன் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.


மிஸ்கினின் உதவி இயக்குநர் ஸ்ரீகணேஷ்


இயக்குநர் மிஸ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீகணேஷ். எட்டு தோட்டாக்கள் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் இளம் இயக்குநர்களில் ஒருவராக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டார்.


தனது இரண்டாவது படமாக அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்கிற படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு, பின் கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.


தனது ஒவ்வொரு தவறுகளையும் நேரடியாக மக்களுடன் உரையாட விரும்புபவர் ஸ்ரீகணேஷ். தற்போது குருதி ஆட்டம் படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் ஸ்ரீகணேஷ். இதில் குருதி ஆட்டம் படத்தின் தோல்வியில் இருந்து தான் நிறைய முக்கியமான பாடங்களை கற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்தப் பதிவின் முழு வடிவம் கீழ்வருமாறு..


‘தோல்விகளில் இருந்து மீள்வதே மிகப்பெரிய வெற்றி’


தோல்விகள், கடினமான நேரங்கள் நமக்கு வாழ்க்கையில் முக்கியமான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. இந்தப் படத்தில் நான் செய்த தவறுகளை தெரிந்துகொள்ள படம் தொடர்பான எல்லா எதிர்வினைகளையும்  விமர்சனங்களையும் கவனித்தேன், திரையரங்குகளில் பார்வையாளர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்த்தேன்.


இந்தப் படத்தின் திரைக்கதையில் இருந்து நடைமுறைப்படுத்தியது வரை பல பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நான் புரிந்துகொண்டேன். தங்களது நேர்மையற்றதன்மையால் இந்தப் படத்தைக் சிதைத்த ஒரு சிலரை குற்றம்சாட்டுவதற்கும் சண்டையிடுவதற்கும் பதிலாக, என்னுடைய அடுத்த படைப்பை  சிறந்த முறையில் உருவாக்க கடினமாக உழைக்க முடிவு செய்தேன்.


ஒரு எழுத்தாளராக நான் தவறு செய்திருக்கிறேன். என் உள்ளுணர்வு மற்றும் நம்பிக்கையில் இருந்து நான் எடுத்திருக்க வேண்டிய முடிவுகளை உதாசீனம் செய்திருக்கிறேன்.  நான் கற்றுக்கொண்ட மற்றொரு முக்கியமான பாடம் என்னவென்றால், இடைப்பட்ட காலத்தில் நான் தொடர்ச்சியாக இணைய தொடர்களை பார்க்கத் தொடங்கினேன்.


அவற்றின் தாக்கத்தால் ஒரு திரைப்படத்துக்கு இணையத் தொடரின் வடிவத்தை பொருத்தியிருக்கிறேன். திரைக்கதை அமைப்பு வேறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். இந்தக் காரணத்தால் என்னுடைய படத்தின் கதை சிதறலாக வெளிப்பட்டது.


ஒவ்வொரு படமும் ஒரு கூட்டு முயற்சி' என்பதும், ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க உங்களைச் சுற்றி சரியான நபர்கள் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு இயக்குனரால் தனியாக ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது. அவருக்கு ஒரே மாதிரியான ஆற்றல், எண்ணம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தேவை. பணத்தில் நேர்மையற்றவர்கள், தங்கள் வேலையில் நேர்மையற்றவர்கள் இந்த இரண்டு வகையான மக்களும் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களால் ஒரு திரைப்படத்தை அழிக்க முடியும்.


படத்தில் மிகவும் கடினமாக உழைத்த சில ஆன்மாக்கள் உள்ளனர். எவ்வளவு நல்லெண்ணம் கொண்டிருந்தாலும் இறுதியாக படைப்பு முழுமையாக இருக்க வேண்டும் . நாம் பார்வையாளர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த ஓராண்டு காலத்தில் நான் கடினமாக உழைத்தேன். திரைப்படங்களைப் பற்றி படித்தேன்.


ஒரு சில நபர்களுடன் மட்டுமே நபர்களுடன் நேரத்தைச் செலவிட்டேன், இந்த ஒரு வருடத்தில் ஒரு வெப் சீரிஸ், 2 முழு நீளப்படத்துக்கான திரைக்கதைகளை எழுதி முடித்தேன். அடுத்த முறை நான் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது அது நிச்சயம் கதை ரீதியாகவும் தரத்திலும் சிறந்த ஒரு படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். 


"ஒரு போதும் வீழ்ச்சியடையாமல் இருப்பதில் இல்லை, ஆனால் நாம் விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில்தான்  நமது மிகப்பெரிய வெற்றி அடங்கியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.