அடுத்த முறை இன்னும் சிறந்த படத்தை தருவதற்கு நான் கடுமையாக உழைப்பேன் என குருதி ஆட்டம் இயக்குநர் ஸ்ரீகணேஷ் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


8 தோட்டாக்கள் படத்துக்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு ஸ்ரீ கணேஷின் அடுத்த படமான குருதி ஆட்டம் வெளியானது. நடிகர் அதர்வா முரளி நடிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் நாள் வெளியான இந்த திரைப்படம் மதுரையை பின்னணியாக வைத்து கபடி போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் ராதா ரவி, பிரியா பவனி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வத்சன் சக்ரவர்த்தி நடித்தார். இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கு 8 தோட்டாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் குருதி ஆட்டம் மீது எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. ஆனாலும் கொரோனா, ஷூட்டிங் இடைவெளி என பல தடைகளை தாண்டியே இப்படம் திரைக்கு வந்தது.






இந்த படம் குறித்து அப்போது ஸ்ரீகணேஷ் பேசுகையில், “எட்டுதோட்டாக்கள் என்னைச் சுற்றி இருக்கும் மக்கள் கதைகளைக் கேட்டு உருவானது. படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம் எல்லாம் அப்படி உருவானதுதான். குருதியாட்டம் படத்தை எடுத்து முடிப்பதற்குள் நிறைய தடங்கல்களைக் கடந்தோம். நிறைய பேர் முதுகில் குத்தினார்கள். அவற்றை பற்றி இங்கே பேசவில்லை. ஆனால் அதெல்லாம்தான் இந்தப் படம் உருவாகக் காரணம். என் போராட்டங்கள் வழியாக இல்லாமல் என் சாதனைகள் வழியாக அறியப்பட விரும்புகிறேன்” என்றார். 






ஆனால் ஸ்ரீகணேஷுக்கு இந்த திரைப்படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பல்வேறு குறைகளைத் தாங்கி வந்த குருதி ஆட்டம் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் பிரபல ஓடிடி தளமான ஆஹா தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை ஆஹா தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஸ்ரீகணேஷ், ‘ இது ஒரு நன்றி மற்றும் வருத்தம் தெரிவிக்கும் பதிவு. குருதி ஆட்டம் வெளியீட்டின் போது ஆதரவு, வாழ்த்துகள், பதிவுகள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை . படத்தில் உள்ள குறைகளுக்கு வருந்துகிறேன், அடுத்த முறை இன்னும் சிறந்த படத்தை தருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன், உண்மையாக உழைப்பேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.