சினிமாவில் நடிக்க முயற்சித்த காலக்கட்டத்தில் தன்னிடம் நிறைய பேர் நெகட்டிவாக பேசியதாக குய்கோ படத்தின் நடிகை துர்கா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


டி.அருள்செழியன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள  “குய்கோ” படம் நேற்று (நவம்பர் 24) தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குய்கோ படத்துக்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 


இதனிடையே குய்கோ படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ள நடிகை துர்கா தனது திரையுலக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “குய்கோ படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கேரக்டர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நான் முத்துமாரி என்ற கேரக்டர் பண்ணியுள்ளேன். அமைதியான ஒரு பெண்ணாக வருவேன். படத்தில் நான் பெரிதாக பேசாத நிலையில், என்னைப் பற்றி எல்லாரும் பேசுவார்கள். 


நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தள். டிவியில் எதாவது பார்க்கும்போது அதில் வருபவர்கள் வேற உலகத்தில் இருப்பதாக நினைப்பனே தவிர, என்னை அவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன். சென்னை வந்து பிறகு சில பேர் சொன்னதை கேட்டு தான் முயற்சி செய்தேன். 5 ஆண்டுகள் செய்த முயற்சியில் எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. இந்த காலக்கட்டத்தில் என்னிடம் பாசிட்டிவை விட நெகட்டிவாக பேசியவர்களே அதிகம். அப்போது எல்லாம் பேசாமல் வீட்டுக்கே போயிடலாமா என்று கூட தோன்றும். 


குய்கோ படம் கமிட் ஆகி விட்டேன் என என்னிடம் படம் பண்ண சொல்லி வருபவர்களிடம் சொன்னால், ‘நீங்க யோகிபாபுவுடன் படம் பண்ணினால் அடுத்தப்படம் வாய்ப்பு கிடைக்காது’ என சொன்னார்கள். இன்னைக்கு யோகிபாபு சார் இருக்கும் நிலையே வேறு. எனக்கு பெரிய அளவில் பின்புலம் இல்லை. நான் ஒவ்வொருவராக சந்திக்கும்போது தான் எனக்கு பல விஷயங்கள் புரியுது. 


அதேபோல் நான் ஒரு திருமணமானவள். கல்யாணம் செய்து கொண்டால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என சொன்னார்கள். எனக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை இல்லை. நான் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவே நினைக்கிறேன். எனக்கு நடிகை ஊர்வசியை மிகவும் பிடிக்கும். அவரைப்போல வர வேண்டும் என்பதே ஆசையாகும். ஊர்வசியைப் போல என்னாலும் எத்தகைய கேரக்டர்கள் வேண்டுமானாலும் பண்ண முடியும்” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க:  Kuiko Movie: "ஊர்ல எல்லா கோயிலுக்கும் நல்லது பண்றாரு” .. அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி ‘குய்கோ’ படத்தில் வசனம்..!