54th International Film Festival:  கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநர் பிரிவில் 7 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளன.


சர்வதேச திரைப்பட விழா:


இந்த ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார். விழாவானது பிரிட்டிஷ் திரைப்படமான கேட்ச்சிங் டஸ்ட் படத்தை திரையிடலுடன் தொடங்கியது. 

அதில், வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அவர்களின் சிறந்த திரைப்படங்களுக்கு ஒரு தளத்தை வழங்கும் விதமாக சிறந்த படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டதில் ஏழு படங்கள் தேர்வாகின. 


அல்மோஸ்ட் என்டைர்லி எ ஸ்லைட் டிசாஸ்டர்: உமுத் சுபாஸால் இயக்கப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் இஸ்தான்புல்லில் உள்ள நான்கு நபர்களின் வாழ்க்கையை ஆராய்கிறது. புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளும் கவலைகளுடன் நகைச்சுவையை சாமர்த்தியமாக இந்தப் படம் இணைத்துள்ளது.


லெட் மீ கோ: மாக்சிம் ராப்பாஸ் இயக்கிய இந்தப் படம் சுவிட்சர்லாந்தில் கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் கேன்ஸ்  திரைப்பட விழா, ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் இடம்பெற்றது.


ஒகாரினா: அல்பான் ஜோக்ஜானி இயக்கிய அல்பேனியத் திரைப்படமான ஒகாரினா, ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும்போது வாழ்க்கை முறை மாற்றத்தால் எழும் குடும்பப் பிரச்சினைகளின் கதையாகும்.


ஸ்லீப்: ஜேசன் யூவின் என்ற இயக்குநரால் இயக்கப்பட்ட இந்தத் தென் கொரிய திரைப்படம் ஒரு கர்ப்பிணி மனைவியின் கதையைச் சொல்கிறது.


வென் தி சீட்லிங்ஸ் குரோ: துருக்கிய திரைப்பட இயக்குநர் ரீகர் ஆசாத் கயா இயக்கிய இந்த திரைப்படம் கோபானேவில் உள்ள ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி சுழல்கிறது, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் மீது போரின் விளைவுகளையும் இது இணைக்கிறது.


தாய் ஆகர்: அம்ரிக் சிங் தீப்பின் 'தீர்த்தன் கே பாத்' நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரவீன் அரோரா இயக்கிய இந்தி திரைப்படமான இது 1980-களில் உத்தராகண்ட் மாநிலத்தில் நடக்கும் கதை ஆகும்.  பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அழுத்தமான செய்தியுடன் காதலை ஒரு விடுதலை சக்தியாக இந்தப் படம் வலியுறுத்துகிறது.


இரட்டா: ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கிய இந்திய மொழியான மலையாளத் திரைப்படமான இரட்டா, காவல் துறையில் பணிபுரியும் இரட்டையர்கள், அதில் ஒருவரின் மரணம் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை விவரிக்கிறது.