தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் கடந்த 10 ஆண்டுகளாக உதவி இயக்குநர்களாக இருந்த சபரி மற்றும் குரு சரவணன் இருவரும் இணைந்து 'கார்டியன்' என்ற படத்தை இயக்கியுள்ளனர். ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடிக்கும் இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் சி.எஸ். தங்கதுரை, பிரியா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
'கார்டியன்' படத்தின் இயக்குநர்கள் சபரி மற்றும் குரு சரவணன் தங்களின் குருவாக நினைக்கும் கே.எஸ் ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் தெலுங்கு ஸ்டார் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பற்றி ஸ்வாரஸ்யமாக பேசி அங்கு கூடியிருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
"நண்பர்கள் இருவரும் என்றுமே ஒன்றாக இணைந்தே இருக்க வேண்டும் நான் எப்போதும் அவர்களிடம் சொல்வதுண்டு. ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள். சரவணன் எப்போது சிரித்து கொண்டே இருப்பான். ஆனால் சபரி எப்போதுமே சிரிக்கவே மாட்டான். நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் எடுத்தோம்.
பாலகிருஷ்ணாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது அவரை பார்த்து சிரித்து விட்டால் அவ்வளவு தான். அவருக்கு பயங்கரமாக கோபம் வந்துவிடும். "எதுக்குடா என்னை பார்த்து சிரிக்குற?" என பயங்கரமாக கோபப்படுவார். அவர் கிட்ட ஒரு தடவை சரவணன் மாட்டிகிட்டான். சரவணன் கிட்ட சொல்லி ஃபேனை அவர் பக்கமா திருப்ப சொல்லி இருக்கார் பாலகிருஷ்ணா. இவனும் அவர் சொன்னது போலவே ஃபேனை திருப்பி பிடிக்க அவரோட விக் லைட்டா ஷேக்கானதை பார்த்து அவர் அட்ஜஸ்ட் செய்து இருக்கார். அதை பார்த்த சரவணன் சிரித்துவிட்டான். பாலகிருஷ்ணாவும் அவன் சிரித்ததை பார்த்துவிட்டார். "டேய் எதுக்கு சிரிக்குற?" என கேட்டுகிட்டே இருக்க நம்ம அசிஸ்டன்ட் ஆச்சே அடிச்சுட போறாரேன்னு ஓடி போய் சமாதானம் செய்ய போனேன்.
சார் அவன் நம்மளோட அசிஸ்டன்ட் தான் சார்னு நான் சொன்னதும் "லேது லேது... ஆப்போசிட் கேங்கு" அப்படினு பாலகிருஷ்ணா சொல்லிட்டு அவனை அடிக்க எழுந்து நிக்குறாரு. இவன் அப்பவும் சிரிச்சுகிட்டே நிக்குறான். "ஏன்டா இன்னும் இங்கேயே நின்னுகிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க? போடா" என சொல்லி பிறகு சரவணனை விரட்டிவிட்டேன். பாலகிருஷ்ணா மிகவும் நல்ல மனிதர். இருந்தாலும் அவருக்கு எல்லா விஷயத்திலேயும் ஒரு சந்தேகம் இருக்கும். மிகவும் வித்தியாசமான மனிதர் என பாலகிருஷ்ணா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.