சின்னக்குயில், இசைக்குயில் என்ற அங்கீகாரத்திற்கு சொந்தக்காரர் பிரபல பாடகி சித்ரா. தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளார். இதுவரை ஆறு முறை தேசிய விருதுகளும், தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகளும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் உயரிய அந்தஸ்து பெற்ற பத்ம விபூஷன் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர் பாடகி சித்ரா. 


கடந்த 1988 ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை மணந்த நடிகை சித்ராவுக்கு 14 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2002 ஆம் ஆண்டு பிறந்த அந்த குழந்தைக்கு நந்தனா என பெயரிட்டனர். 'ஆட்டிசம்' என்ற நோயால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை மீது சித்ரா மிகவும் அன்பாக இருந்தார். அளவுக்கு அதிக பாசம் காட்டி வளர்த்த அந்த குழந்தையை 2011 ஆம் ஆண்டு விபத்தில் இழந்தார் சித்ரா. 




குழந்தையின் நோய் பாதிப்பு காரணமாக எங்கு சென்றாலும் தன்னுடன் அழைத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர் சித்ரா. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள அவர், மகள் நந்தனாவையும் அழைத்துச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக அங்கு நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து சித்ராவின் மகள் நந்தனா உயிரிழந்தார். இந்த சம்பவம் சித்ராவின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் பலரும் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க கூறி அறிவுறுத்தினர். ஆனால் தனது வயது மூப்பு காரணமாக தத்தெடுக்க முன்வரவில்லை பாடகி சித்ரா.


இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மகள் நந்தனாவின் பிறந்தநாளன்று அவர் குறித்தும், அவருக்காகவும் சில குறிப்புகளை எழுதும் வழக்கம் கொண்டு வருகிறார் பாடகி சித்ரா. இந்த ஆண்டு மகள் நந்தனாவின் பிறந்த தினத்தையொட்டி சித்ரா எழுதிய குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 






"நீ எங்கும் அன்பு நிறைந்த சொர்க்கத்தில் தேவதைகளுடன் உனது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறாய். வருடங்கள் வந்து போனாலும் நீ என்றும் இளமையுடன் இருப்பாய். நீ என்னை விட்டு மிகத்தொலைவில் இருப்பினும், நீ நலமாய் இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். லவ் யூ நந்தனா; இன்று உன்னை அதிகமாக மிஸ் செய்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'எனது அன்பு நந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகள் நந்தனாவிற்கு அவரது பிறந்தநாள் அன்று சித்ரா எழுதிய குறிப்பு தற்போது வைரலாகி வருகிறது.



அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ''ஒவ்வொரு பிறப்பும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. அந்த நோக்கம் நிறைவடைந்த பின் மக்கள் இந்த உலகத்தை விட்டு விடை பெறுபவர் என்று கூறுவர். காலம் அனைத்தையும் சரி செய்யும் என்று கூறுவர். ஆனால் காயப்பட்டவர்களுக்கு மட்டுமே அது நிஜமல்ல என்பது தெரியும். அந்த காயம் அதே வலியுடன் இன்றும் ஆறாமல் இருக்கிறது. மிஸ் யூ நந்தனா'' என குறிப்பிட்டுள்ளார்.