தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு  ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.








ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 






இதனிடையே இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூறி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சம்பிரதாய முறைப்படி பழங்கள் வைக்கப்பட்ட தட்டுகளை வழங்கி ஜல்லிக்கட்டு போட்டி குறித்தான ஆலோசனைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவிழா கமிட்டியினர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது எனவும்,  அரசின் விதிகளுக்கு உட்பட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளதாகவும்,  நாளை அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட உள்ளோம் என்றும்,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விழாவிற்கு முதலமைச்சரை அழைக்க உள்ளோம் எனவும் ஆன்லைன் மூலமாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன் வழங்குவது குறித்து அரசை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தனர்.