கோழி கூவுது படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜி உடல்நிலை மோசமாகி பல அறுவை சிகிச்சைகள் செய்து துன்பத்தில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், காதல் ஏமாற்றத்தில் உயிரையே மாய்த்துக் கொண்டார். 

 

பிரபு பட ஹீரோயின்:


 

கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்த கோழி கூவுது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜி. சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லையென்றாலும் தந்தையின் வற்புறுத்தலால் விஜி திரையில் நடிக்க வந்துள்ளார். முதல் படத்திலே நல்ல நடிப்பை வெளிப்படுத்திய விஜி, தொடர்ந்து சாட்சி, பொய்க்கால் குதிரை, சூரியன், என் பிரியமே, உள்ளம் உருகுதடி, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

துணை நடிகையாகவும், ஹீரோயினாகவும் மட்டும் இல்லாமல் சூரியன் படத்திலும், ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி அசத்தினார். திரையில் ஓரளவுக்கு நடித்து கொண்டிருந்த போது விஜிக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூவே உனக்காக படத்தின் போது விஜிக்கு இடுப்பு மற்றும் முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் விஜிக்கு நோய்தொற்று ஏற்பட்டு கடும் பாதிப்பை சந்தித்துள்ளார்.

 

தற்கொலை:


அந்த நோய்தொற்று குணமாக்க மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ததால் கை, கால் செயலிழக்கும் நிலைக்கு சென்றார். பின்னர் செயலிழந்த கை, காலை சரி செய்ய மேலும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவழியாக தனது உடலை மீட்டெடுத்த விஜி, 2000ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சிம்மாசனம் படத்தில் நடித்தார். விஜியின் நிலைமையை பார்த்து விஜயகாந்த் இந்த வாய்ப்பை கொடுத்ததாகவும், அடுத்ததாக வாஞ்சிநாதன் படத்தில் நடிக்க வைக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், அதற்குள் விஜி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். விஜி தன்னுடன் வேலைபார்த்த இயக்குநர் ஏ.ஆர். ரமேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் ரமேஷிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரியவந்தது. எனினும், ரமேஷ் மீதான காதலை முறித்து கொள்ளாத விஜி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதற்கிடையே, காதல் என்ற பெயரில் ரமேஷிடம் ஏமாந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத விஜி 2000ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நடிகைகளின் சோகம்:


அவர் எழுதி வைத்த கடித்ததில் ரமேஷை காதலித்ததாகவும், திருமணமானதை அவர் மறைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் இயக்குநர் ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சின்னசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

 

சினிமாவில் நல்ல நடிகையாக வளர்ந்து வந்த விஜி உடல்நலக்குறைவு ஏற்பட்டு பல அறுவை சிகிச்சைகளை செய்து மனம் தளராமல் மீண்டு வந்தார். ஆனால், காதல் ஏற்றம் அவரது வாழ்க்கையை முடித்து கொள்ள வைத்தது. விஜி மட்டும் இல்லாமல் சில்க்ஸ் ஸ்மிதா முதல் சின்னத்திரை நடிகை சித்ரா வரை பல சினிமா நடிகைகளின் வாழ்க்கை மர்மமாகவே பாதியில் முடிந்துள்ளது.