தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது பிரிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் எத்தனையோ ஆண் காமெடியன்களை இந்த திரையுலகம் கடந்து வந்து இருந்தாலும் பெண் காமெடியன்களை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் நின்று சாதித்தவர் நடிகை கோவை சரளா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 




கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதால் அவருடைய பெயருடன் அவரின் சொந்த ஊரும் ஒட்டிக்கொண்டு கோவை சரளா என்பதை தன்னுடைய அடையாளமாக்கி கொண்டார். நடிப்பின் மீது இருந்த தீராத காதலால் படித்து கொண்டு இருக்கும்போதே சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தவருக்கு கே.ஆர். விஜயாவின் வெள்ளி ரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடிப்பில் பிச்சு உதறி இருப்பார். அப்போது அவர் 10ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். அதை தொடர்ந்து சின்ன வீடு, சதிலீலாவதி, கரகாட்டக்காரன், காஞ்சனா உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் கலக்கி இருந்தார் கோவை சரளா.


இன்றும் சுறுசுறுப்புடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளின் நடுவராக இருந்து வருகிறார். 


கோவை சரளா தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரையில் தன்னுடைய நான்கு சகோதரிகளையும் சகோதரனையும் கரை சேர்ப்பதற்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்.


திருமண வாழ்க்கையில் ஈடுபடாதது குறித்தும் அவர் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்தும் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்து இருந்தார். பிறக்கும் போது தனியாக பிறப்பதை போல் இறக்கும் போது தனியாக தான் இறக்கிறோம். இடையில் எதற்கு இந்த தேவையில்லாத உறவுகள். வாழும் போது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.


திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல பெற்றோர்களும் பிள்ளைகள் ஒதுக்கியதால் தனிமையில்தான் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். யாரையும் சார்ந்து வாழ்வது எனக்கு பிடிக்காது. 




சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்றும் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்றும் என்னுடைய குடும்பத்தினர் என்னை வீட்டை விட்டு விரட்டி அடித்து விட்டனர் என்றும் வதந்திகள் பரவி வந்தன. அவை எதுவுமே உண்மையில்லை. என்னுடைய சகோதரிகள் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை வீட்டில் இருக்க போரடித்தால் சில சமயங்களில் கோயிலுக்கு செல்வேன். 


ஒரு சிலர் நான் அரசியலில் இறங்கப் போவதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எனக்கு அரசியல் ஆர்வம் எல்லாம் இல்லை அதனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் நடிகர் எம்.ஜி.ஆர் தீவிர ரசிகை. அவரின் படங்களை பார்த்து பார்த்து தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. இதுவரையில் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன் என பேசி இருந்தார் நடிகை  கோவை சரளா. இன்றும் படங்களில் நடித்து வருகிறார்.