சூரி 


நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் சூரி தற்போது நாயகனாகவும் கலக்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் சூரிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது, தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் திரைப்படம் சூரியை கமர்சியல் நடிகராக அடையாளம் கண்டது. விடுதலை 2 ஆம் பாகம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக  பிரசாந்த் பாண்டியராஜ் சூரியின் அடுத்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு மாமன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 


கொட்டுக்காளி மாதிரி படத்தில் சூரி நடிக்க மாட்டார்


சூரி நடிப்பில் கடைசியாக கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனமீர்த்த பி.எஸ் வினோத் ராஜ் இப்படத்தை இயக்கினார். கூழாங்கல் தொடர்ந்து சூரியை வைத்து அவர் இயக்கிய படம் கொட்டுக்காளி. அனா பென் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்தார்.  பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்ற இப்படம் திரையரங்கில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது . விமர்சனப்பூர்வமாக படம் பாராட்டுக்களைப் பெற்றாலும் வெகுஜனம் இப்படத்தை ட்ரோல் செய்தனர். கருடன் மாதிரியான ஒரு படத்திற்கு பின் சூரி ஏன் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடித்தார் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது .


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கொட்டுக்காளி பட இயக்குநர் வினோத்ராஜ் இப்படி கூறியுள்ளார் " கொட்டுக்காளி மாதிரியான ஒரு படத்தில் இனிமேல் சூரி நடிக்க மாட்டார். அவர் இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் தன்னை நிலையாக நிறுத்திக் கொள்ளவேண்டும் . கொட்டுக்காளி படத்தை நம்பி அவ்வளவு ஆர்வமாகவும் நம்பிக்கையாவும்  வந்தார். அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவருக்கு கிடைத்த கிரெடிட் என்ன. கருடன் மாதிரியான ஒரு படத்திற்கு பின் சூரி ஏன் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடித்தார் என்கிற கருத்து விமர்சகர்களிடம் இருந்து வரும் போது அவர் என்ன செய்வார். "