சூரி


விடுதலை , கருடன் என சூரி நாயகனாக நடித்த அடுத்தடுத்த இரு படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள்ளன. அடுத்தபடியாக சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ் வினோத்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். மலையாள நடிகை அனா பென் இப்படத்தில் நாயகியாக  நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. காமெடியனாக ரசிகர்களை மகிழ்வித்த சூரி நாயகனாக தற்போது தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துள்ளார். இயக்குநர்களும் அவரிடம் பல கதைகளை சொல்லி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் மகன் ஜேஸன் விஜய் சூரியிடம் கதை சொல்லியிருப்பதாகவும் அதை சூரி நிராகரித்து விட்டதாகவும்  சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து நடிகர் சூரி தற்போது விளக்கமளித்துள்ளார். 


ஜேஸன் விஜய் கதையை நிராகரித்தது ஏன்?


பெரிய ஸ்டார்களின் வாரிசுகள் பொதுவாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நடிகர் விஜயின் மகன் இயக்குநராக வேண்டும் என்று விருப்பப் படுகிறார். தனது முதல் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரோடக்‌ஷஸ் தயாரிப்பில் ஜேஸன் விஜய் இயக்கவிருக்கிறார். இதற்கான திரைக்கதை பணிகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். தனது படத்திற்கான நாயகனை தேடி வரும் ஜேஸன் நடிகர் கவின் , விஜய் சேதுபதி மற்றும் துருவ் விக்ரம் ஆகிய மூவரை தனது லிஸ்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில்  ஜேஸன் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் கதை ஒன்றை சொன்னதாகவும் ஒரு மணி நேரம் கதையை பொறுமையாக கேட்ட சூரி ஜேஸன் விஜயிடன் சொன்ன பதில் இது தான் " தம்பி உங்க கதை அருமையா இருக்கும். நீங்கள் சொன்னது போலவே எடுத்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட். ஆனால் இந்த படத்தில் நான் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." என்று சூரி தெரிவித்துள்ளார். 






நாயகனாக நடித்தாலும் ஒரேடியாக கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான கதைகளை தேடாமல் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும்விதமான கதைகளை தேர்வு செய்து வருகிறார் சூரி. எதிர்காலத்தில் சூரி ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தால் ஜேஸன் விஜய் கதையில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.