சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான '3' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தார் நடிகர் தனுஷ். பல இடங்களிலும் சிவகார்த்திகேயன் நடிப்பு திறமை பற்றி பெருமையாக பேசியுள்ளார். சிவகார்த்திகேயனை போலவே இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தீனா என பலருக்கும் தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பளித்தது நடிகர் தனுஷ் தான் என்ற பேச்சுக்கள் அடிபடும். தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே ஏதோ பிரச்சினை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாக சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் மேடையில் பேசுகையில் "நான் தான் அவர்களை கண்டுபிடித்து வாழ்க்கை கொடுத்தேன், நான் தான் தயார் செய்தேன் என்றெல்லாம் ஒருபோதும் யாரையும் சொல்லமாட்டேன். அப்படியே என்னை சொல்லி சொல்லி பழகிவிட்டார்கள். என்னுடைய நண்பரை அறிமுகம் செய்து வைப்பது போல தான் நான் செய்கிறேன்" என பேசி இருந்தார்.
சிவகார்த்திகேயன் மறைமுகமாக தனுஷை தான் தாக்கி பேசி இருந்தார் என்பது போல சில செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய பிளாஷ்பேக் வீடியோக்களை தற்போது பகிர்ந்து நேரடியாக சிவகார்த்திகேயனை தாக்கி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தனுஷ் பேசிய அந்த வீடியோவில் "நான் யாரும் எனக்கு நன்றியுடன் இருக்கனும் என எதிர்பார்த்ததும் இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை" என பேசி இருந்தார்.