உலகம் முழுவதும் கொரிய திரைப்படங்கள் தனக்கென பிரத்யேக ரசிகர்களையும் சந்தையையும் கொண்டுள்ளன. கொரிய சினிமாக்களை கொண்டாடாத உலக சினிமா ரசிகர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.
வரவேற்பு பெறும் கொரிய சினிமாக்கள்
மேலும் ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் கொரிய க்ளாசிக் படங்கள் தொடங்கி இன்று வெளிவரும் படங்கள் வரை உலகம் முழுவதும் குறிப்பாக இந்திய சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கொரிய சினிமா ரசிகர்களுக்காக சென்னையில் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை கொரிய திரைப்பட விழா நடைபெற உள்ளது.
சென்னையில் கொரிய திரைப்பட விழா
தென் கொரிய துணைத் தூதரகம் மற்றும் இந்திய சினிமா பாராட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த விழாவில், நாள் ஒன்றுக்கு இரண்டு காட்சிகள் வீதம் மொத்தம் ஆறு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இனாக்ரல் ஃபங்ஷன், அசாசினேஷன், த ஃப்ரண்ட் லைன், டோங்ஜூ, நேம்லெஸ் கேங்ஸ்டர், த ஃபேஸ் ரீடர் ஆகிய ஆறு படங்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு படங்கள் வீதம் அடுத்தடுத்து திரையிடப்பட உள்ளன.
இந்த விழாவுக்கு அனுமதி கட்டணம் எதுவுமில்லை என்றும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா
முன்னதாக 19ஆவது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி நிறைவடைந்தது. 8 நாட்கள் நடைபெற்ற இந்த 19ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்' நடத்தியது, பிவிஆர் நிறுவனம் இணைந்து வழங்கியது.
மொத்தம் 121 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக அதற்கு முந்தைய ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்